சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: உயர் நீதிமன்றம் அனுமதி

சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: உயர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் படி நீதிமன்ற உத்தரவின்படி 9-ம் தேதி தனியார் மருத்துவ மனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குற்றவியல் நீதி மன்றத்துக்கு வந்தார். ஸ்டெச்சரில் படுத்தபடி ராஜகோபால் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதி களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்ததில், அவருக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு 11 மணி அளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் உறவினர்கள் மருத்துவமனையில் வரத்தொடங்கினர். ஆனால், அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர் சிகிச்சை பெறும் வார்டு உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தந்தை ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி, மகன் சரவணன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் தாக்கல் செய்த அறிக்கையில், ராஜகோபாலுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருப்பதால், வேறு மருத்துவமனைக்கு அவரை மாற்றுவது சிக்கலானது என்று தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டதால், அதற்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக சரவணன் வாக்கு அளித்தார். இதனையடுத்து ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

எனினும் ராஜகோபாலின் ரத்த அழுத்தம் மோசமான நிலையில் உள்ளதால், தனியார் மருத்துவமனைக்கு அவரை மாற்றுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.     

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in