புதிய கல்விக் கொள்கை: சூர்யாவுக்கு அன்புமணி ஆதரவு

புதிய கல்விக் கொள்கை: சூர்யாவுக்கு அன்புமணி ஆதரவு
Updated on
1 min read

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்று புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா தெரிவித்த கருத்து பற்றி பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

சென்னை, தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில், கட்சியின் 31-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் இளைஞரணி சார்பில், அன்புமணி கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ''வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவார். அதற்கு பாமக உறுதுணையாக இருக்கும்.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய நாங்களும் தனிக் குழு அமைத்திருக்கிறோம். அதில், என்னென்ன சாதக, பாதகங்கள் உள்ளன என்பது குறித்து ஆய்வு நடத்துவோம். ஆய்வு முடிவுகளை மத்திய, மாநில அரசுகளிடம் வழங்கி, அழுத்தம் கொடுப்போம்.

யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். மக்கள் தொடர்பான கருத்தைச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. இது ஜனநாயக நாடு'' என்றார் அன்புமணி.

முன்னதாக, அண்மையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசிய கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள் 3 வயதிலே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும் ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி என்றும் விமர்சித்திருந்தார்.

30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்துப் பேசவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in