Last Updated : 16 Jul, 2019 04:45 PM

 

Published : 16 Jul 2019 04:45 PM
Last Updated : 16 Jul 2019 04:45 PM

சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?

காவல்துறையில் காவல் ஆய்வாளருக்கு இணையான சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் (Special Inspector) பதவி அறிவிப்பு மானியக் கோரிக்கையில் இடம் பெறுமா என, எஸ்.எஸ்.ஐ.,க்கள் (Special Sub Inspector) எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேரும் ஒருவர், பணிக் காலத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருக்கும் பட்சத்தில் கிரோடு-1, தலைமைக் காவலர் பதவி நிலை உயர்வு அளிக்கப்படுகிறது.  25 ஆண்டுக்குபின் சிறப்பு எஸ்.ஐ. என்ற நிலை உயர்வும் வழங்கப்படுகிறது. நேரடி எஸ்.ஐ.க்குரிய  சம்பளம், சீருடை அளித்தாலும், பெரும்பாலும், தலைமைக் காவலர் கணக்கில் மட்டுமே அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விசாரணை அதிகாரி அந்தஸ்து வழங்குவதில்லை. போலீஸ் அகாடமியில் 6 மாத பயிற்சி முடித்த பிறகே காவல் நிலையங்களில் நேரடி எஸ்.ஐ.க்கு இணையான பணிகள் ஒதுக்கப்படுகின்றன. 

சிறப்பு எஸ்.ஐ.களுக்கான பயிற்சியும் பணி மூப்பு அடிப்படையில் வழங்குவதில் சிலர் ஆய்வாளர் பதவி உயர்வை எட்டுவதில்லை. எந்தவித குற்றச் சாட்டுமின்றி 35 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தாலும், சிறப்பு எஸ்.ஐ. என்ற அந்தஸ்துடன் பணி ஓய்வு பெறுகின்றனர். இதை போக்கும் வகையில் ஆய்வாளருக்கு பதவி உயர்வுக்கு இணையான சிறப்பு ஆய்வாளர் என்ற பதவி நிலை வழங்கவேண்டும் என  புலம்புகின்றனர்.  இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என சிறப்பு எஸ்.ஐ.க்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறப்பு எஸ்.ஐ.க்கள்  சிலர் இதுகுறித்து பேசும்போது, "காவல்துறையை பொறுத்துவரை பிற அரசு துறை போன்று பதவி உயர்வு கிடையாது. அதற்கு பதிலாக நிலை உயர்வு வழங்கப்படுகிறது. எங்களுக்கு பிற ஒருவர் அமைச்சு பணியாளர் அல்லது பிற துறையில் பணியில் சேர்ந்தால் பல்வேறு பதவி உயர்வை பெற்று, அதிக சம்பள உயர்வு பெறுகின்றனர்.

தமிழகம் முழு வதும் 35 ஆண்டுகளை கடந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் சுமார் 5 ஆயிரம் பேரும், 34 ஆண்டை தாண டியவர்கள் 3 ஆயிரமும் பேரும் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எஸ்.ஐ. பயிற்சிக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. சிறப்பு எஸ்.ஐ.க்கு தற்போது வழங்கும் கிரேடு சம்பளம் ரூ.4,800 என்பதை ஆய்வாளருக்குரிய கிரேடு சம்பளமான ரூ.5,400 ஆக மாற்றி, சிறப்பு காவல் ஆய்வாளர் பதவி வழங்கவேண்டும். இது நீண்ட நாள் கோரிக்கையாகவே இருக்கிறது. 2016-ல் திமுக தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றிருந்தது.  எனவே, ஜூலை 19-ல் நடக்கும் காவல் துறைக்கான மானியக் கோரிக்கை இது பற்றிய அறிவிப்பு வெளியாகுமா என்ற ஏக்கத்தில் உள்ளோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x