

ரஜினி அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி கூறிய கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். யார் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி கூறவேண்டாம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேலை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அண்மையில் கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''வேலூரில் யார் மக்களவை உறுப்பினராக வரவேண்டும் என்பதை ரஜினி ரசிகர்களால் தீர்மானிக்க முடியாது. திரைப்படத்துக்கும் அரசியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
எம்ஜிஆருக்குப் பிறகு எந்த அரசியல் நடிகரும் அரசியல் வானத்தில் பிரகாசித்தது கிடையாது. எனவே, வீண் முயற்சிகள் வேண்டாம் என்று ரஜினி ரசிகன் என்ற முறையில் அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்'' என்றார் கே.எஸ்.அழகிரி.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''இன்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும், மற்றவர்கள் வரக்கூடாது என்று சொல்வதற்கு காங்கிரஸ் கட்சிதான் சான்றிதழ் அளிக்கிறதா?
கே.எஸ்.அழகிரி தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு நீங்கள் சான்றிதழ் கொடுக்காதீர்கள்'' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.