

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும் வெப்பச்சலனத்தின் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரி, நுங்கம்பாக்கம், புழல் ஏரி அருகே 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
வளிமண்டலத்தின் கீழடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை, உள் மாவட்டங்களின் வழியாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதனாலும் வெப்பச்சலனத்தின் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
கனமழையைப் பொறுத்தவரையில், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூட மழை பெய்யக்கூடும். தென்மேற்குப் பருவ மழையைப் பொறுத்தவரையில் கடந்த ஜூன் 1 முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 6 செ.மீ. இதன் இயல்பு அளவு 9 செ.மீ. இயல்பைவிட 31% குறைவாக மழை பெய்துள்ளது''.
இவ்வாறு தெரிவித்தார் பாலச்சந்திரன்.