

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கிய கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூலை 16 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அதன் பெற்றோர்கள் சார்பில் தீ விபத்து நிகழ்ந்த பள்ளியின் முன்பாக 94 குழந்தைகளின் புகைப்படங்கள் அடங்கிய படங்களை அச்சிட்டு அதன் முன்பாக மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தியும் பூக்களைத் தூவியும் இறந்த குழந்தைகளுக்காக பலவகையான தின்பண்டங்களை வைத்தும் பழங்களை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அவரவர் வீடுகளில் குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டங்கள் புதிய ஆடைகளை வைத்துப் படையலிட்டு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து காலை 11 மணி அளவில் கும்பகோணம் பாலக்கரையில் உள்ள 94 குழந்தைகளின் நினைவாக தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளியின் முன்பாக பெற்றோர்கள் அமர்ந்து நினைவஞ்சலி செலுத்தினர். மாலை 5 மணிக்கு பள்ளி தீ விபத்து நிகழ்ந்த காசிராமன் தெருவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மகாமக குளத்தில் பெற்றோர்கள் சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
-சுந்தர்ராஜ்