Last Updated : 16 Jul, 2019 11:45 AM

 

Published : 16 Jul 2019 11:45 AM
Last Updated : 16 Jul 2019 11:45 AM

ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துப் பேசியதால் விபரீதம்: செல்போன் வெடித்து இளைஞர் படுகாயம்

கிருஷ்ணகிரி 

சூளகிரியில் ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துப் பேசியபடி இருசக்கர வாகனத்தில் சென்ற போது செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசி பக்கமுள்ள குருபரபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (30).  இவர் கட்டிட மேஸ்திரி. பெங்களூரில் வேலை செய்து வரும் ஆறுமுகம், நேற்று (திங்கட்கிழமை) சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்தவாறு பேசியபடி சென்றார்.

அப்போது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென்று வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள், ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கிருந்து மேல் சிகிச்சைகாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

                                                           வெடித்த செல்போன் 

இதுதொடர்பாக ஆறுமுகத்தின் சகோதாரர் ஜெயபால் கூறும்போது, "ஆறுமுகம் பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். மாதச் சீட்டுப் பணம் கட்டுவதற்காக நேற்று ஊரில் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்துடன், ஊருக்கு வந்து  கொண்டிருந்தார். சூளகிரி அருகே வரும் ஹெல்மெட்டுக்குள் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். அவர் மீட்கப்பட்டு சூளகிரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைகாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மயங்கி விழுந்த போது, அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்", எனத் தெரிவித்தார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x