

விழுப்புரம்
ரஜினி அவருக்குத் தெரிந்ததை மட்டும் செய்தால் அவருக்கு நல்லது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
"பள்ளிக்கூடம் அவசியம் என்பதை உணர்ந்து, 5 ஆண்டுகளில் 12,500 பள்ளிக்கூடங்களை அமைத்து வரலாற்று சாதனை படைத்தவர் காமராஜர். இதனால் தான் இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இன்று பல கட்சிகள் சமூக நீதி பற்றிப் பேசுகின்றன. ஆனால், அதனைத் தொடங்கியவர் காமராஜர் தான். 5,000 ஆண்டுகளாக ஒரு சமுதாயம் கீழேயும், ஒரு சமுதாயம் மேலேயும் இருப்பதை எண்ணி, சமநிலை பெற இட ஒதுக்கீட்டை வழங்க நேருவிடம் கோரியவர் காமராஜர். அப்போது, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தினர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக சட்டத் திருத்தம் வந்தது அப்போதுதான். பாகிஸ்தான், இரண்டாகப் போகிறது. சமத்துவக் கொள்கையை காங்கிரஸ் பின்பற்றியதால் தான் இந்தியா நிலைத்து நிற்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. காங்கிரஸ் கொள்கைக்கு ஒரு காலத்திலும் தோல்வி கிடையாது.
இப்போதைய ஆட்சியாளர்கள், இந்தியில், ஆங்கிலத்தில் தான் தேர்வு என நிர்பந்திக்கின்றனர். தாய்மொழில் தேர்வு எழுதுவதே முழுமையாக அமையும். கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரியாதவர்கள் வந்து, கலாச்சாரப் படையெடுப்பை நிகழ்த்தியுள்ளனர். தமிழகத்துக்கான மத்திய அரசின் 10,500 வேலைவாய்ப்புகளில், தமிழ் தெரிந்தவர்கள் 561 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். சுதந்திரம் பெற்றபோது 80 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தார்கள். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சியில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் 20 சதவீதத்தினர். இதனை செய்து முடித்தது காங்கிரஸ் ஆட்சிதான்.
இந்தியா, இந்தி பேசும் 5 மாநிலத்தவர்களுக்கானது மட்டுமில்லை. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையைக் கடைப்பிடித்தால் பேராபத்தில் முடியும்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்க, பிரதமர் மோடி முயல்கிறார். உலகளாவிய ஒப்பந்தத்தைக் கோர உள்ளனர். இளைஞர்கள் இதனை எதிர்த்துப் போராட வேண்டும்.
ஆனால், ரஜினி ஆதரவு யாருக்கு என, தேவையின்றிப் பேசி வருகின்றனர்.சினிமா வேறு, அரசியல் வேறு. நானும் ரஜினி ரசிகன் தான். அவரை ஏற்க முடியாது. ரஜினிக்கு தமிழக அரசியல் ஒத்துவராது. அவருக்குத் தெரிந்ததை மட்டும் அவர் செய்தால், அவருக்கும் நல்லது. குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு முன்னேற்பாடு செய்யவில்லை. செயலற்றுள்ளது. காங்கிரஸார் மாவட்டத்துக்கு ஒரு குளத்தை சீரமைக்க வேண்டும். நம்பிக்கையோடு உழைத்தால் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர முடியும்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.