Published : 16 Jul 2019 10:40 AM
Last Updated : 16 Jul 2019 10:40 AM

பொள்ளாச்சி வளர்ச்சிக்கு கைகொடுக்குமா மத்திய அரசு?

எஸ்.கோபு

விருந்தோம்பல், மரியாதையான பேச்சுக்குப் பெயர் பெற்றது கொங்கு மண்டலம். இம்மண்டலத்தின் மையப் பகுதியான கோவை மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது  பொள்ளாச்சி நகரம். நூற்றாண்டு பழமையையும், பெருமையையும் கொண்டுள்ள  நகரைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள், செழிப்பான விவசாய நிலங்களால் வேளாண்மை தற்சார்பு பொருளாதாரத்தை கொண்டுள்ளது பொள்ளாச்சி.

இங்கு விளையும் வேளாண் பொருட்கள் மற்றும் வளர்க்கப்படும் கால்நடைகளை  விற்பனை செய்யும் வகையில், ஆங்கிலேயர் காலத்திலேயே சந்தை உருவானது. இந்த சந்தை அசுர வளர்ச்சி காரணமாக, தென்னிந்தியாவின் மிகப் பெரிய கால்நடை சந்தையாக மாறியது.

'பொழில்வாய்ச்சி’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட சிறு நகரம், சந்தைப்  பொருளாதாரத்தால் மிகப் பெரிய  வளர்ச்சி பெற்று,  தற்போது தென்னை சார் பொருட்கள் உற்பத்தியால் உலக வரைபடத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுள்ளது.
தொலைநோக்குச் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட பல தொழிற்சாலைகள்,  பொள்ளாச்சியை தொழில் நகரமாக மாற்றியது. கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகத்துடன்  தொழிற்கல்வியைப் போதித்த கல்வி நிறுவனங்களால், பொள்ளாச்சியில் இளம் தொழிலதிபர்களும், தொழிற்கூடங்களும் உருவாகின. உழவும், தொழிலும் பொள்ளாச்சியை வளமாக்கின. 

1920-ல் நான்கு சதுர மைல் பரப்பளவில் 8,693 பேருடன் இருந்த பொள்ளாச்சி நகரம் தற்போது  13.87 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிவடைந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ளது.

பாதாள சாக்கடைத் திட்டம்,  நகர்ப் பகுதி நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், உடுமலை-பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச்சாலைப் பணிகள்,  நகரப் புறவழிச் சாலைப் பணிகள், பொள்ளாச்சி-கோவைக்கு மாற்றுப் பாதை,  குடிநீர் திட்டம் விரிவாக்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிக்கலான மகப்பேறுவை கையாள, மேம்படுத்தப்பட்ட தரமான சிகிச்சை அளிக்க 3 மாடிகளுடன் நவீன வசதிகள் கொண்ட கட்டிடம்,  பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் காய்கறி சந்தைக்கு நவீனக் கட்டிடம் என 100 ஆண்டுகள் பழமையான இந்த நகரத்தின் தோற்றத்தை,  மாநில அரசு மாற்றி வருகிறது.

எனினும், நகரின் பரப்பளவைப்போல, அதன் தேவைகளும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

பொள்ளாச்சி நகரின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்களிப்பும் அவசியம் என்பதையும், திட்டங்களைப் பெற்றுத்தர வேண்டிய தார்மீகக் கடமை பொள்ளாச்சி மக்களவை உறுப்பினருக்கு உள்ளது என்பதையும் உணர்ந்த பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையினர், ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரத்திடம் பல்வேறு  கோரிக்கைகளை  இவ்வமைப்பினர் வலியுறுத்தினர்.

தேவைகள் ஏராளம்! 

இந்தியாவிலேயே அதிக தென்னை மரங்கள் உள்ள பகுதியாகத் திகழ்கிறது பொள்ளாச்சி. ஆனால், மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய தலைமை அலுவலகம் கொச்சியிலும், அதன் மண்டல அலுவலகம் சென்னையிலும்தான் செயல்பட்டு வருகின்றன. தென்னை நல வாரியத்தின் முழு பயனும் தென்னை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டுமெனில், மண்டல அலுவலகத்தை பொள்ளாச்சி நகருக்கு மாற்ற வேண்டும்.

 மத்திய அரசின்  வேளாண் உணவுப் பூங்காவை (அக்ரோ ஃபுட் பார்க்) பொள்ளாச்சி பகுதியில் அமைத்து, தேங்காயிலிருந்து  மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், நீரா, தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை ஆகியவற்றை  அமைக்க வேண்டும்.
கிணத்துக்கடவு பகுதி தக்காளி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையான, குளிர்பதனக் கிடங்கு வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொள்ளாச்சி ரயில் நிலையத்தை,  நவீன வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பு மின்மயமாக்கப்பட வேண்டும். 

பதப்படுத்தப்பட்ட இளநீர், தேங்காய், மதிப்புக் கூட்டப்பட்ட தென்னை நார் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி ஆகியவற்றால்,  ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை  அந்நியச்  செலாவணி  வர்த்தகம் நடைபெறும் பொள்ளாச்சி நகரின் வளர்ச்சிக்கு உதவ,  திப்பம்பட்டி அருகே `ஐசிடி ஸ்டப்பிங் சென்டர்- கன்டெய்னர் டெர்மினல்' உருவாக்க  வேண்டும்.

துறைமுக நகரங்களான கொச்சி, தூத்துக்குடி, சென்னை மற்றும் வட மாநில நகரங்களுக்கு,  பொள்ளாச்சியிலிருந்து நேரடியாக ரயில்கள் இயக்க வேண்டும்.

அதிக கல்லூரிகள் நிறைந்த கோவை மாவட்டத்தில், மத்திய அரசின் ஐஐடி  கல்வி நிறுவனத்தை பொள்ளாச்சி நகரில் நிறுவ வேண்டும். மத்திய அரசின் கேந்திரா வித்யா பவன், ஸ்கில் இந்தியா பயிற்சி மையம் ஆகியவற்றுடன், 200 ஏக்கர் பரப்பளவில்,  நவீன வசதிகளுடன் கூடிய  விளையாட்டு மைதானத்தையும் பொள்ளாச்சியில் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பட்டியலிட்டு, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரத்திடம் தொழில் வர்த்தக சபையினர் வழங்கினர்.

இது தொடர்பாக பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் கூறும்போது, "பொள்ளாச்சி நகரின் வளர்ச்சிக்கான தேவைகளையும்,  ஆலோசனைகளையும் தொழில் வர்த்தக சபை அளித்துள்ளது.  மக்களின் வளர்ச்சிக்கான தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றித்  தரக்கூடிய  மத்திய அமைச்சர்களும் உள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய முயற்சிகள்  எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x