Published : 16 Jul 2019 10:38 AM
Last Updated : 16 Jul 2019 10:38 AM

கர்நாடக அரசின் நாடகத்தை பொறுத்துக்கொள்ளாமல் காவிரி நீரைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

கர்நாடக அரசின் நாடகத்தை பொறுத்துக்கொள்ளாமல் காவிரி நீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி இன்னும் முழுமையாக திறக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக அரசிடம் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு உரிய 9.19. டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டிஎம்சி தண்ணீரும் திறந்துவிட உத்தரவிட்டும் கர்நாடக அரசு அந்த உத்தரவை மதிக்காமல், உரிய தண்ணீரை திறக்காமல் இருக்கின்றது.

கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேலும் ஹேரங்கி கபினி உள்ளிட்ட அணைகளில் தண்ணீரின் அளவு 3 டிஎம்சி யிலுருந்து 25 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கான தண்ணீரை இன்னும் திறக்க முன்வரவில்லை.

இதனையெல்லாம் காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் முக்கிய கவனத்தில் கொண்டு கர்நாடக அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கான தண்ணீரை காலத்தே முறையாக திறக்காமல் இருப்பதால் விவசாயத் தொழிலுக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்காமல் தமிழக மக்கள் பெரும் அவதிக்கும், அலைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

குறிப்பாக காவிரி தண்ணீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலை செய்ய முடியாமல் விவசாயிகள் மன வேதனை அடைந்து துயரத்தில் மூழ்கி இருக்கிறார்கள். ஆனால், கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையப்படி தண்ணீரை திறந்துவிடாமல் அவ்வப்போது சிறிதளவுக்கு மட்டுமே தண்ணீரை திறந்துவிட்டு, தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது என்று கூறிவருகிறது. அதுமட்டுமல்ல தற்போது கர்நாடக முதல்வர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கூறுகிறாரே தவிர உரிய தண்ணீரை இன்னும் திறக்கவில்லை.

கர்நாடக அரசின் நாடகத்தை காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் இனியும் பொறுத்துக்கொள்ளாமல் உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டும். தமிழகத்திற்கான தண்ணீர் கிடைத்தால் தான் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு குறையும்.

எனவே தமிழக அரசும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான தண்ணீரைப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்", என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x