Published : 16 Jul 2019 10:30 AM
Last Updated : 16 Jul 2019 10:30 AM

எளிய மொழிநடையில் சமய இலக்கியங்களுக்கு உரை!- தமிழ்ப் பணியில் புலவர் வீ.சிவஞானம்

ஆர்.கிருஷ்ணகுமார்

உலகின் மிகப் பழமையானது மட்டுமின்றி, அத்தனை மொழிகளிலும் சிறந்த மொழி தமிழ் மொழியே. எண்ணிக்கை, காலப்பழமை, யாப்பியல், இசை வடிவங்கள் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பு, மிகப் பரந்து விரிந்தது. கடைச்சங்க காலம் முதற்கொண்டு, 20-ம் நூற்றாண்டின் இறுதி வரை தோற்றம் கொண்ட பல்வேறு வகையான இலக்கியப் பரப்பில், 60 சதவீத இலக்கியங்கள் சைவ சமயம் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான பாடல்கள் கொண்ட சைவ சமய இலக்கியங்களில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை எனலாம்.

அதேசமயம், தற்போதைய மொழி நடைக்கும், இலக்கிய நடைக்கும் உள்ள வேறுபாட்டால், சைவ சமய இலக்கியங்களை நம்மால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. இந்த நிலையில், மிக எளிய மொழி நடையில், சமய இலக்கிய நூல்களுக்கு உரை நூல்களை எழுதிக் குவித்துள்ளார் புலவர் வீ.சிவஞானம் (67).

பொதுவாக, இலக்கிய நூலாசிரியர்கள் சிறப்பிக்கப்படுவதுபோல, அந்நூல்களுக்கு உரையெழுதும் உரையாசிரியர்கள் சிறப்பிக்கப்படுவதில்லை. ஆனால், இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாது, தொடர்ந்து எழுதி குவித்துக் கொண்டிருக்கிறார் புலவர் வீ.சிவஞானம். கோவை வடவள்ளி பெரியதோட்டம் காலனியில் குடியிருக்கும் புலவர் சிவஞானத்தை சந்திக்கச் சென்றபோது, சட்டை அணியாமல், கழுத்தில் சிவலிங்கம் அணிந்து, எழுத்துப் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார்.  அவரிடம் பேசினோம்.

"அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் என்ற சிறிய கிராமம்தான் பூர்வீகம். பெற்றோர் வீராசாமி-சிவபாக்கியம். பாரம்பரிய நெசவுக் குடும்பம். வாரியங்காவல் அரசுப் பள்ளியில் கல்வியை முடித்து, திருப்பனந்தாளில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றேன். தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் `தமிழ் பண்டிட்'  படிப்பு முடித்தேன்.

1974-ல் கோவையில் உள்ள தனியார் டுடோரியல் ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு பூமார்க்கெட் தேவாங்க  மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து, 29 ஆண்டுகளுக்குப் பிறகு முதுநிலைப் பட்டதாரி தமிழாசிரியராக ஓய்வுபெற்றேன்.

நெசவும்... சொற்பொழிவும்...

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, குடும்ப வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு, தறி நெய்யும் தொழிலில் ஈடுபட்டேன். 15 நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. அப்போது, பெரியம்மா தலையிட்டு, மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க உதவினார். சிறு வயதிலிருந்தே கிருபானந்தவாரியார், புலவர் கீரன்,  அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோரது சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பேன். நானும் சொற்பொழிவாற்றத் தொடங்கினேன். கோவையில் 15 ஆண்டுகளுக்கு மேல், பெரும்பாலான கோயில்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சொற்பொழிவாற்றியுள்ளேன். கோவை மத்திய சிறைச்சாலையில் பெரியபுராணச் சொற்பொழிவாற்றினேன். பள்ளிகளிலும் இலக்கியம், அறநெறிகள் குறித்து பேசியுள்ளேன். அதேபோல, எங்கள் பகுதியில் வீடு வீடாகச் சென்று சமயச் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளேன். பணி நிறைவுக்குப் பின்னர் பேச்சுப் பணியில் கவனத்தைக் குறைத்துக்கொண்டு, எழுத்துப் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டேன்.

பல்வேறு சமய இலக்கிய நூல்களில் மூல உரையானது தெளிவில்லாமலும், புரியாமலும் இருந்தது. இதனால், மக்களுக்குப் புரியும் வகையில், எளிய மொழி நடையில் ஆன்மிக நூல்களுக்கு உரை எழுத வேண்டுமென்று கருதினேன். முதன்முதலில் சிவபுராணத்துக்கு உரை எழுதி, கையடக்க நூலாக வெளியிட்டேன். தொடர்ந்து திருநாவுக்கரசர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருவாசகம், தாயுமான சுவாமி பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள், குருநமச்சிவாயர் பாடல்கள், பேரூர் புராணம், திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நீதி நூல்கள், தேவார மூவர் வாழ்வும் வாக்கும், சிவபுராணம் என ஏராளமான நூல்களுக்கு உரை எழுதினேன்.

ஆதி சாந்தலிங்கர் நூலுக்கு உரைச்சாரம்!

பேரூர் ஆதி சாந்தலிங்க அடிகளார் எழுதிய கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் நூல்களுக்கு, சிதம்பர சாமி உரை எழுதியுள்ளார்.   இந்த நான்கு நூல்களுக்கும் நான் உரைச்சாரம் (உரைக்கு உரை) எழுதியுள்ளேன்.  இதேபோல, ஒழிவில் ஒடுக்கம் என்ற நூலுக்கு உரைச்சாரமும்,  அருணாச்சல புராணத்துக்கு உரைநடைச்சுருக்கமும் எழுதியுள்ளேன். இவை தவிர, பேரூர் ஆதீனம் வெளியிட்ட முத்திக்கு வித்து, திருமுருகாற்றுப்படை, கோபப் பிரசாதம், குருமரபு நான்மணிமாலை, நன்னெறி, நால்வர் நான்மணிமாலை, சிவநாமமகிமை, இட்டலிங்க கைத்தலமாலை, இட்டலிங்க அபிடேக மாலை நூல்களுக்கு உரை எழுதியுள்ளேன்.

திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னாநாற்பது, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, குகை நமச்சிவாயர் பாடல்கள், விவேகசிந்தாமணி உரை நூல்கள் அச்சில் உள்ளன. திருமந்திரத்துக்கு பொழிப்புரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
மூவர் முதலிகள் என்று போற்றக்கூடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் எழுதிய தேவாரப் பாடல்களுக்கு , தல வரலாற்று அடிப்படையில் பதிகங்களை வரிசைப்படுத்தி, பாடல், அருஞ்சொற்பொருள், பொழிப்புரை என எழுதியிருப்பது மிகுந்த மன நிறைவை அளித்தது. அதேபோல, மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகத்துக்கும் உரை எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. பட்டினத்தார் பாடல்களுக்கு உரை எழுதியபோது, அவரது வரலாற்றையும் சேர்த்து எழுதினேன்.

நீதி நெறி நூல்கள்...

ஆன்மிகத்துக்கு அடிப்படை ஒழுக்கம். எனவேதான், சமய நூல்களுடன், திருக்குறள் உள்ளிட்ட ஏழு நீதி நூல்களுக்கு உரை எழுதினேன். கோவை பேரூர்  ஆதீனம் வெளியிட்டு வரும் சிவசாந்தலிங்கர் என்ற ஆன்மிக இதழில் பல ஆண்டுகளாக கட்டுரை எழுதி வருகிறேன். 
சின்னவேடம்பட்டி கௌமாரமடாலயம் வெளியிடும் கௌமார அமுதம் என்ற ஆன்மிக இதழில், `தவத்திரு  கந்தசாமி சுவாமிகள் பனுவல் திரட்டு' என்ற நூலில் உள்ள பாடல்களுக்கு உரை எழுதினேன்.  பல்வேறு நாளிதழ்களிலும், பருவ இதழ்களிலும் ஆன்மிகக் கட்டுரைகளை எழுதியுள்ளேன்.  

2015-ல் வீரசைவ தீட்சை பெற்றுக்கொண்டு, நித்யபூஜை நடத்தி வருகிறேன். பேரூர் ஆதீனம் தெய்வத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் என்னை வெகுவாகப் பாராட்டி, பேரூர் ஆதீனப் புலவர் என்று குறிப்பிட்டதை மிகுந்த கௌரவமாக கருதுகிறேன். இதேபோல, பேரூர் ஆதீனம் சார்பில் நயஉரைச் செம்மல், சொல்லரசு ஆகிய பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.  பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும், இவற்றை பெரும்பேறாகக் கருதுகிறேன். கவிக்கோ அப்துல்ரகுமான், தேவாரம் உரையைப் படித்துவிட்டுப் பாராட்டியது மறக்க முடியாதது" என்றார் நெகிழ்ச்சியுடன் புலவர் வீ.சிவஞானம்.  இவருக்கு மனைவி ராஜலட்சுமி, 2 மகன்கள் உள்ளனர். ஆன்மிகத் தேடல் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, சைவ சமய நூல்களைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டவர்களுக்கும் இவரது உரை நூல்கள் மிகப் பயனுள்ளவை என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x