

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது, எவ்வித குற்றச்செயல்களும் நடைபெறா மல் தடுக்க மாநகர போலீஸார் மேற் கொண்ட நடவடிக்கைகளுக்கு பக்தர் களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பிரசித்திபெற்ற இத் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந் தேறியது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் தேரோட்ட விழாவின்போது நகைபறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்றுவந்தன. இதைத் தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகர காவல்துறை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டிலும் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்திருந்தன.
தீவிர நடவடிக்கை
இவ்வாண்டு தேரோட்டத்தின்போது குற்றச்செயல்களே நடைபெறாதது போலீஸாருக்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாண்டு தேரோட்டத்தின்போது அசம்பாவிதங்களைத் தடுக்கவும், நகை பறிப்பு, வழிப்பறி, பிக்பாக்கெட், பெண்களிடம் அத்துமீறுவது போன்ற குற்றச்செயல்களை தடுக்கவும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போலீஸார் எடுத்திருந்தனர்.
திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோயில் அருகேபுறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. சீருடையிலும், சாதாரண உடையிலும் போலீஸார் 4 ரதவீதிகளிலும், சுற்றியுள்ள தெருக்களிலும் கண்காணிப்பில் ஈடு பட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம், வாகனங்களில் பொருத்தப் பட்ட சுழலும் கேமராக்கள், 10க்கும் மேற்பட்ட வானூர்தி கேமராக்கள் மூலம் வீடியோக்கள், புகைப் படங்கள் எடுக்கப்பட்டு, குற்றச்செயல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டன.
குழந்தைகள் கையில் டேக்
வாட்ச் வடிவிலான டேக் தயாரித்து குழந்தைகளின் கைகளில் அவற்றை போலீஸார் கட்டிவிட்டனர். அதில், குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், அவர்களது செல்போன் எண்களை எழுதி வைத்தனர்.
இதன் மூலம் கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்தால் உடனடியாக அந்த டேக்கில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றோரிடம் சேர்க்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, பெற்றோரைப் பிரிந்த தென்காசியைச் சேர்ந்த ஒரு குழந்தையை போலீஸார் மீட்டு, ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து 5-வது நிமிடத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு தேரோட்டத்தின் போது மாயமான குழந்தைகள் மற்றும் முதியோர் என்று 12 பேரை போலீஸார் மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
உடனுக்குடன் மீட்பு
நகைகள் திருட்டுபோகாமல் தடுக்க பெண்களுக்கு சேப்டி பின்களை போலீ ஸார் ரதவீதிகளில் வழங்கினர். தங்கள் ஆடையோடு நகைகளை சேர்த்து கோர்த் துக்கொள்ள் பெண்கள் அறிவுறுத்தப் பட்டனர். தேரோட்டத்தில் பங்கேற்றவர் களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் தவற விட்ட ஸ்மார்ட் ஃபோன்களை கண்டெடுத்த பக்தர்கள் போலீஸாரிடம் அவற்றை ஒப்படைத்தனர். அவர்களது நேர்மையை போலீஸார் பாராட்டினர்.
இதுபோன்று போலீஸார் மேற் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளா லும் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், மனநிறைவை யும் ஏற்படுத்தியது. போலீஸாருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
4 பேர் கைது
இதுகுறித்து, மாநகர காவல்துறை ஆணையர் என்.பாஸ்கரன் கூறும் போது, ``நகைபறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெறவில்லை. நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் போலீஸாரிடம் பிடிபட்டனர். முதன் முதலாக டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட் டது. தேர்கள் நிலையம் அடைய போலீஸார் உதவி புரிந்தனர்” என்று தெரிவித்தார்.