உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்.31 வரை அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் கோரிக்கை

உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்.31 வரை அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் தேவை என வேண்டுகோள் விடுத்து உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. ‘இதனால் பல்வேறு மக்கள் நலப்பணிகளும், நலத்திட்டங்களும்  நடக்காமல் உள்ளாட்சி அமைப்புகள் முடக்கமடைந்துள்ளன. தமிழக அரசு வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’ என வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதிரஞ்சன் கோகோய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  ‘உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான இறுதிப் பணிகளை எப்போது முடிப்பீர்கள், மறுவரையறை, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகள் எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில்,  இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘உள்ளாட் சித் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தமிழகத்தில் இன்னும் தொகுதி மறுவரையறை பணிகள் முடியவில்லை. 

அந்தப் பணிகள் முடிந்த பிறகே தேர்தலை நடத்த முடியும். எனவே, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வரும் அக்டோபர் 31 வரை காலஅவகாசம் தேவை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்துஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். தேர்தலை நடத்துவதில் காலம் தாழ்த்தும் எண்ணம் இல்லை’ என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in