Published : 16 Jul 2019 09:59 AM
Last Updated : 16 Jul 2019 09:59 AM

ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்ஜினில் வாயுக் கசிவு ஏற்பட்டதால் சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் தள்ளிவைப்பு: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு; மாற்று தேதி விரைவில் அறிவிப்பு

சென்னை

ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜினில் வாயுக் கசிவு இருப்பது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், ‘சந்திரயான்-2’ விண்கலத்தை விண் ணில் ஏவும் திட்டம் நிறுத்தப்பட்டது. சரியான நேரத்தில் கோளாறு கண்டு பிடிக்கப்பட்டதால், பெரும் சேதம், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2008-ல் ‘சந்திரயான்’ விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. நிலவில் தண்ணீர் இருப்பதை அது உறுதி செய்தது. அதன் செயல்பாடு முன்கூட்டியே முடிந்த போதிலும், அதன் பயணம் வெற்றிகரமாக முடிந்தது, இந்திய விஞ்ஞானிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் வகையில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை விண் ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதிநவீன வசதிகளுடன் சந்திரயான்-2 விண்கலம் உருவாக் கப்பட்டது. அதை விண்ணில் செலுத்த 4 முறை திட்டமிடப்பட்டு, பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலம் நேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், ராக்கெட் புறப்படுவதற்கான 20 மணிநேர கவுன்ட்-டவுன் 14-ம் தேதி காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்துகொண்டு விண்ணில் பாய்வதற்கு ஜிஎஸ் எல்வி - மார்க் 3 ராக்கெட் தயாராக இருந்தது. அனைத்து பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்தபடி இருந்தனர்.

ராக்கெட் புறப்படுவதற்கு 56 நிமிடம் 24 விநாடிகள் இருந்த நிலையில், சரியாக 1.55 மணி அளவில் கவுன்ட்-டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் குருபிரசாத் தெரிவித்தார்.

திடீர் வாயுக் கசிவு

சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்துசெல்லும் ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட்டின் முக்கிய பகுதி கிரையோஜெனிக் இன்ஜின். இந்த இன்ஜினில் எரிபொருளை வேகமாக எரித்து ராக்கெட்டை மேலே எழுப்பும் உந்துசக்தியை கொடுக்க, ஆக்சிஜன், ஹீலியம் வாயுக்களும் அதில் நிரப்பப்படும். இந்நிலையில், ஹீலியம் வாயு நிரப்பப்படும் பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கடைசி நேரத்தில் கண்டுபிடித்தனர். அதை உடனே சரிசெய்ய முடியாததால் சந்திரயான்-2 ஏவப்படும் திட்டத்தை தள்ளிவைத்துள்ளனர்.

ஒருவேளை, இதை கண்டுபிடிக் காமல் ராக்கெட்டை விண்ணில் ஏவியிருந்தால், ராக்கெட் முழு வதும் வெடித்து சிதறி இருக்கும். ராக்கெட் வெடித்த இடத்தில் இருந்து 6 கி.மீ. சுற்றளவுக்கு பெரும் பாதிப்பும் ஏற்பட்டு இருக் கும். வாயுக் கசிவு ஏற்பட்டதை கண்காணிப்பு கேமரா மூலம் விஞ் ஞானிகள் பார்த்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

பெரும் சேதம் தவிர்ப்பு

பாதிப்பை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, ராக்கெட் ஏவும் முடிவை இஸ்ரோ விஞ்ஞானிகள் தள்ளிவைத்தது சாதுர்யமான செயல் என்று டிஆர்டிஓ முன் னாள் விஞ்ஞானி ரவி குப்தா பாராட்டியுள்ளார். “இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும் போது இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது இயல்பே. ஆனால், கோளாறைக் கண்டறிந்து சரியான நேரத்தில் விண்கலத்தின் பயணத்தை தள்ளிவைத்ததே நமது விஞ்ஞானிகளின் சாதனைதான்.

ஒருவேளை, இதைக் கண்டறி யாமல் ஏவியிருந்தால் மிகப் பெரிய சேதம், அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இனி பிரச்சி னையை சரியாகக் கண்டறிந்து இன்னொரு நாளில் சந்திரயான்- 2 விண்கலத்தை ஏவுவார்கள். இதுபோன்ற மிகப்பெரிய திட் டத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. அதனால்தான் சில வேளைகளில், கவுன்ட்-டவுன் நேரத்தை 72 மணிநேரம் வரைகூட நீட்டித்து வைப்போம்’’ என்று அவர் கூறினார்.

‘வெற்றிபெற வாழ்த்து’

சந்திரயான்-2 ஏவப்படும் நிகழ்ச் சியை நேரில் பார்வையிடுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திர ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மன், முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர்கள், செயலாளர்களும் சதீஷ் தவான் ஏவுதளத்துக்கு வந்திருந்தனர்.

விண்கலத்தின் பயணம் திடீ ரென நிறுத்தப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் உள்ளிட்டோ ரிடம் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.

தக்க சமயத்தில் தொழில்நுட்பக் கோளாறை கண்டுபிடித்த விஞ் ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர்கள், அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டு மற்றொரு நாளில் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த வாழ்த்து தெரிவித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x