Published : 16 Jul 2019 09:37 AM
Last Updated : 16 Jul 2019 09:37 AM

காஞ்சி அத்திவரதர் வைபவம்: நெரிசல் குறைந்து 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்

பச்சை பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்திவரதர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் நேற்று 3 மணி நேரத்தில் அத்திவரதரை அமைதியாக தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந் தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் திரண்டனர்.

கடந்த சனிக்கிழமை பக்தர்கள் அதிக அளவு திரண்டதால் வரதராஜப் பெருமாள் கோயிலைச் சுற்றிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. அன்றைய தினம் இரவு 1 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அன்றைய ஒரு நாள் மட்டும் 2.5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரைத் தரிசனம் செய்தனர். பல பேர் கூட்ட நெரிசலில் சிக்கி அத்திவரதரை தரிசிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் இதேபோல் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் பொதுமக்கள் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டியிருந்தது.

அமைதியான தரிசனம்

வாரத்தின் தொடக்க நாளான நேற்று கூட்ட நெரிசல் பெருமளவு குறைந்து காணப்பட்டது. கிழக்கு கோபுரத்தின் உள் பகுதியில் வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் இருந்தது. ஆனால், கோபுரத்துக்கு வெளிப் பகுதியில் வரிசைகள் இல்லை. இதனால் 3 மணி நேரத்தில் அமைதியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்று பச்சை பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வரிசையில் வரும் பக்தர்களுக்குக் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது.

சிறப்பு தரிசனத்தில் முறைகேடு

நன்கொடையாளர்கள், முக்கிய நபர்கள் செல்லும் சிறப்புத் தரிசன அனுமதியில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சிறப்புத் தரிசனத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் பல்வேறு அரசியல் கட்சியினர், காவல் துறையினர் அனுமதி அட்டையின்றி அவர்கள் விருப்பத்துக்குரியவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேள்வி எழுப்பும் பக்தர்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்படுவதாக தெரிய வருகிறது. இதுபோன்ற சிறப்பு தரிசன அனுமதியில் நடைபெற்று வரும் குளறுபடிகளைத் தடுக்க, கோயிலுக்கும் விழாக் குழுவினருக்கும் சம்பந்தமே இல்லாத நபர்கள் விஐபி நுழைவுவாயில் அருகே நிற்பதைத் தடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

சாலையோர தடுப்புக் கட்டைகள்

இந்த விழாவுக்காக கோயிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைத்துள்ளவர்கள் சாலையை நோக்கி நகர்ந்து வருவதைத் தடுக்கும் வகையில் சாலையோரங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தடுப்புக் கட்டைகள் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x