

விருதுநகர்/சென்னை
விருதுநகர் அருகே கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சார்பில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் காமராஜர் கல்வி, மருத்துவ அறக்கட்டளை சார்பில் மதுரை - விருதுநகர் 4 வழிச் சாலையில் கள்ளிக்குடி அருகே 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சென்னையில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன், நடிகைகள் ராதிகா, வரலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேநேரம், கள்ளிக்குடியில் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சரத்குமார், அமைச்சர் கடம்பூர் ராஜு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சம்பத், தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், கொங்குநாட்டு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் லிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராம்பாபு உட்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர்ராஜூ பேசியதாவது: தமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் காமராஜர். அவர் நினைத்திருந்தால் பிரதமராகி இருக்கலாம் என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: காமராஜரைப் பின்பற்றியதால்தான் இன்றைக்கு பாஜகவின் மாநிலத் தலைவராக உயர்ந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி கூட ஒருமுறை, தனது கருப்புப் பணம் மீட்பு நடவடிக்கையை காமராஜர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என்று தெரிவித்தார். நாம் தோற்பதற்குபிறந்தவர்கள் அல்ல, வெற்றிபெற பிறந்தவர்கள் என்றார்.
12 ஆண்டு கால முயற்சி
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்து பேசியதாவது: 12 ஆண்டு காலபோராட்டத்துக்குப் பிறகு இந்தமணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை ஒரு சமூகத்தின் தலைவருக்கான மணிமண்டபமாக பார்க்கக் கூடாது. பாரதத்தின் 2 பிரதமர்களை சுட்டிக்காட்டிய தலைவரின் மணிமண்டபமாகப் பார்க்க வேண்டும். யார் மக்களுக்கு நல்லதை செய்பவர்களோ அவர்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன் என்று கூறினார்.
இந்த மணிமண்டபத்தில், காமராஜர் மாணவர்களை தன் இருபக்கமும் பாசத்துடன் அணைத்துக் கொண்டிருக்கும் முழு உருவ வெண்கலச்சிலை, 50 அடி உயரமுள்ள அணையா தீபம், செயற்கைநீரூற்று போன்ற வசதிகள் உள்ளன.
மேலும், மலர்த்தோட்டம், உணவகம், காமராஜர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரி வடிவம், மாநாட்டுக் கூடம், தியான மண்டபம் ஆகிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன.