Published : 16 Jul 2019 08:08 AM
Last Updated : 16 Jul 2019 08:08 AM

பெருங்களத்தூர் - சிங்கப்பெருமாள்கோவில் இடையே சாலை விரிவாக்கம் சென்னையில் நெரிசலை குறைக்க 9 பாலங்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

சென்னை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 9 இடங்களில் பாலங்கள் அமைக்கப்படும். மேலும், பெருங்களத்தூர் - சிங்கபெருமாள்கோவில் வரையிலான 4 வழிப்பாதை 8 வழிப்பாதையாக அகலப்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையின் மீது முதல்வர் பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:

நெடுஞ்சாலை துறையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.19,608.81 கோடி மதிப்பில் 20,237 கிமீ சாலைகளில் அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 42 நகரங்களில் புறவழிச்சாலைப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 9 இடங்களில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

பெருங்களத்தூரில் இருந்து சிங்கபெருமாள்கோவில் வரைதற்போதுள்ள 4 வழிப்பாதை 8 வழிப்பாதையாக அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 654 கிமீ நீளச்சாலைகள் ரூ.6,448 கோடி மதிப்பில் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்துக்குள் கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்கும் வகையில், எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரியில் முடிவடையும் வகையில் 133.38 கிமீ நீளமுள்ள சென்னை எல்லைச் சாலையை செயல்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணி பல்வேறு நிலையில் உள்ளது. ரூ.2,504.63 கோடி மதிப்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி உதவி மூலம் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: சென்னையில் ஹால்டா சந்திப்பு முதல் அடையாறு, பசுமை வழிச்சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக கலங்கரை விளக்கம் வரை, வடபழனி - போரூர், சின்னமலை முதல் வேளச்சேரி புறவழிச்சாலை, அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சந்திப்பு, வால்டாக்ஸ் சாலையில் பேசின் பால சந்திப்பு, அம்பேத்கர் கல்லூரி அருகில் வியாசர்பாடி சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் அடையாரில் உள்ள திரு.வி.க பாலம் முதல் மறைமலை அடிகள் பாலம் வரை அடையாற்றை ஒட்டி புதிய இணைப்புச் சாலை அமைக்கவும் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை ரூ.1.70 கோடியில் தயாரிக்கப்படும்.

மேலும் திருமங்கலம் - முகப்பேர் சாலையில் உள்ள டிஏவி பள்ளி மற்றும் வேலம்மாள் பள்ளி அருகில் நடைமேம்பாலம் அமைக்கவும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து பணிமனை அருகில் சாலை மேம்பாலம் அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை ரூ.65 லட்சத்தில் தயாரிக்கப்படும். படப்பை, ஒசூர் உள்வட்டச் சாலை, தேனி மாவட்டத்தில் நேரு சிலை, மதுரை மாநகரில் மாட்டுதாவணி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையம் உட்பட 7 இடங்களில் சாலை மேம்பாலங்கள், 17 மாவட்டங்களில் உள்ள 379 கிராமங்களில் ரூபாய் 155.80 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 42 ஆற்றுப்பாலங்கள் கட்டப்படும்.

கிழக்கு கடற்கரைச் சாலையை 4 வழித்தடத்தில் இருந்து 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிமற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணி ஆகியவை ரூ.299 கோடியில் மேற்கொள்ளப்படும். சென்னை ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் இரண்டு "யு" வடிவ மேம்பாலங்கள் ரூ.110 கோடியில் கட்டப்படும். சென்னையில் 13 மேம்பாலங்கள் உட்பட 18 பணிகளை மேற்
கொள்ள முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ.1,122கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

ரூ.300 கோடியில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், அம்பத்தூர், ஆவடி, ராமாபுரம், சேலையூர், கொரட்டூர், வடபழனி - பி.டி.ராஜன் சாலை சந்திப்பு, மத்திய கைலாஷ் உட்பட 13 இடங்களில் சாலை மேம்பாலங்கள் அமைப்பது உட்பட 15 அறிவிப்புகளை வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x