தமிழகம்
ஹெச்.ஐ.வி பாதித்த மாணவரை பள்ளியில் சேர்க்க மறுப்பு: பள்ளிக் கல்வித்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
ஹெச்.ஐ.வி. பாதித்த மாணவனை அரசு பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மனித உரிமை ஆணையம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்க்கை கோரிய ஹெச்.ஐ.வி. பாதித்த மாணவருக்கு சேர்க்கை வழங்க பள்ளி தலைமை ஆசிரியர் மறுத்ததாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களில் விளக்கமளிக்க பள்ளிக்கல்வி இயக்குனர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
