Published : 15 Jul 2019 04:47 PM
Last Updated : 15 Jul 2019 04:47 PM

இந்தியை எப்படித் திணித்தாலும் அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளும்: துரைமுருகன் காட்டம்

மத்திய அரசு எப்படி இந்தியைத் திணித்தாலும் அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தபால் துறை தேர்வில் தமிழை நீக்கியது தொடர்பான விவாதத்தை அடுத்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

அப்போது அவர், ''தமிழ், ஆங்கிலம், இந்தி என அஞ்சல் துறை தேர்வு மும்மொழிகளில் எழுதப்பட்டது. அதிலிருந்து தமிழை நீக்கி, இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்று அறிவித்துள்ளார்கள். கலெக்டர் ஆகவேண்டுமென்றால் கூட, தமிழிலியே தேர்வை எழுதி பாஸாக முடியும். 

ஆனால், சிறிய போஸ்ட்மேன் வேலைக்கு தமிழ் தெரியத் தேவையில்லை. இந்திதான் தெரியவேண்டும் என்கிறார்கள். இது இந்தி வெறியின் ஒரு பிரிவு. எந்தெந்தத் துறைகளில் இந்தியைத் திணிக்கமுடியுமோ செய்கிறார்கள்.

அவர்களுடைய ஆட்சியில் இந்தியாவை ஒரே நாடாக்கி விடவேண்டும். ஒரே கட்சி ஆளவேண்டும். ஒரே மதம், ஒரே மொழி இருக்கவேண்டும். இதுதான் பாஜகவின் ஆட்சிக் கொள்கை. இதுவரை எத்தனையோ முறை இந்தி திணிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தமிழகம் எதிர்த்திருக்கிறது.

ஆனால், இன்று எந்த பேப்பரைப் பார்த்தாலும் அந்தத் தேர்வில் இந்தி இருக்கிறது. இதுகுறித்து அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நாங்களும் இந்தியை எதிர்க்கிறோம் என்றார். சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களும்  இந்தியை எதிர்க்கிறோம் என்பதாலும் அதிமுக, திமுகவுக்கு கொள்கை பேதமில்லாததாலும் மத்திய அரசை வற்புறுத்துகிற அளவிலாவது தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் தீர்மானத்தைக் கொண்டுவருவோம் என்றோ, வரமாட்டோம் என்றோ எதையும் சொல்லவில்லை.

ஓர் அரசாக, கொண்டுவருவோம் என்று சொல்லுங்கள். இல்லையெனில் முடியாது என்று சொல்லுங்கள். ஆனால் அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் இதைப் பற்றிப் பேசுங்கள் என்றார்கள். அந்தப் பேரவையில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கக்கூடாது. சட்டப் பேரவையில் நடப்பதை எம்.பி.க்கள்நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும். 

ஆனால் ஒன்று மத்திய அரசு எப்படி இந்தியைத் திணித்தாலும் அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளும்'' என்றார் துரைமுருகன்.


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x