முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் 98-வது பிறந்தநாள்: ஸ்டாலின் நேரில் வாழ்த்து

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் 98-வது பிறந்தநாள்: ஸ்டாலின் நேரில் வாழ்த்து
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்.சங்கரய்யாவின் 98- வது பிறந்தநாளினையொட்டி, இன்று காலை, சென்னை, குரோம்பேட்டையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

“பழுத்த அனுபவமுள்ள மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பெரியவர்  என்.சங்கரய்யா அவர்களுக்கு 98 - ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கடலாகக் காட்சியளிப்பவர். 

ஏழை-எளிய அடித்தட்டு மக்களின்- உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைக்குரலாக ஒலிப்பவர். நேர்மையான அரசியலின் நிலைக் கண்ணாடியாகப் பொதுவாழ்வில் திகழ்பவர்.

பொது வாழ்விற்குத் தேவையான அருங்குணங்களைப் பெற்றவருக்கு 98 ஆவது பிறந்தநாள்  என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கருணாநிதி,  திமுகவுடனும் மிகுந்த நட்பு பாராட்டி –இன்றைக்கும் தோழமையின் சிகரமாக விளங்குபவர். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  திமுக உறவு, அரசியல் ரீதியான உறவு ஆகியவற்றையெல்லாம் தாண்டியது எங்கள் இருவரது நட்பு”  என்று  தனது நட்பு பற்றி சங்கரய்யா அவர்கள், “இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி  இன்றும் என் நினைவில் நிலைத்து நிற்கிறது.

சங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே ஒரு தனிச்சிறப்பு என்பது மட்டுமின்றி நமக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பு  என்றே கருதுகிறேன். அய்யா அவர்கள் நூற்றாண்டையும் கடந்து நீடூழி வாழ வேண்டும், வழிகாட்ட வேண்டும் என்று வணங்கி, வாழ்த்துகிறேன்”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சங்கரய்யா ஒரு குறிப்பு:

மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்டவர் என்.சங்கரய்யா.  98 வயதாகும் சங்கரய்யா தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஆரம்பித்த ஆரம்பகால தலைவர்களில் தமிழகத்தில் வாழும் முதுபெரும் தலைவர் சங்கரய்யா. 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர்.

வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல இயக்கங்களில் பங்கேற்றவர். மக்களுக்கான போராட்டத்தில் பங்கேற்றதால், பத்தாண்டுகள் சுதந்திரத்துக்கு முன்பும் பின்னரும் சிறையில் இருந்தவர். தமிழக அரசியல் களத்தில் பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து அரசியல் தலைவர்களுடன் பங்காற்றியவர்.

1967-ல் மதுரை மேற்குத் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்றார். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் அவர் வெற்றிபெற்றார். சிறந்த மேடைப் பேச்சாளரான சங்கரய்யாவின் அனல்பறக்கும் பேச்சுக்கும், அடுக்கடுக்கான புள்ளிவிபரங்களுக்கும், கம்பீர குரலுக்கும் மாற்றுக்கட்சியினரும் விரும்பி கேட்க கூடுவர்.

தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சிறப்பாக பணியாற்றிவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்துள்ளார். வயோதிகம் காரணமாக தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டார். ஆரம்பகால கட்சியின், இந்திய அரசியலின், மாநில அரசியலின் தகவல்களை குறிப்புகள் இல்லாமல் ஆண்டுவாரியாக பேசுவதில் சங்கரய்யா வல்லவர்.

கட்சியின் அன்றாடப் பணிகளில் ஈடுபடாவிட்டாலும், வாரம் ஒரு முறையேனும் கட்சி அலுவலகத்துக்கு வருவதையும், தவிர்க்க முடியாத கூட்டங்களில் பங்கேற்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

திமுக தலைவராக பொறுப்பேற்றவுடன் தனது தந்தையின் சிறந்த நண்பர்களுள் ஒருவரான சங்கரய்யாவை சந்தித்து ஆசிப்பெற்றார் ஸ்டாலின். இந்நிலையில் அவரது பிறந்தநாளான இன்று குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அளித்து வாழ்த்தி ஆசிபெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in