கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான பாம்பன் மீனவர்களின் நிலை என்ன?- மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான பாம்பன் மீனவர்களின் நிலை என்ன?- மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Updated on
1 min read

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமான பாம்பன் மீனவர்கள் இருவரின் தற்போதைய நிலை குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த ஆரோக்கியசாமி,  உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அடிக்கடி காணாமல்போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதுவரை சுமார் 581 மீனவர்கள்  இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்துள்ளனர். 3000-க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. இவர்களை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஜூலை 4-ல் எனது உறவினர்கள் 4 பேர் பாம்பன் கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் இருவர் இதுவரை கரை திரும்பவில்லை. 2 பேர் புதுக்கோட்டை ஜகதாப்பட்டினத்தில் கரை திரும்பினர். மாயமானவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

அவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டும் பலனில்லை. எனவே காணாமல்போன 2 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு இன்று (திங்கள் கிழமை) விசாரித்தது.

2 மீனவர்கள் மாயமான விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in