

புதிய கல்விக் கொள்கையை இதுவரை உதய சூரியன் கட்சிக்காரர்தான் (ஸ்டாலின்) விமர்சித்தார் என்றால் இப்போது நடிகர் சூர்யாவும் விமர்சிக்கிறார் என்று கிண்டல் செய்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பெருந்தலைவர் பெருமையைப் போற்றுவதில் பாஜக பெருமை கொள்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ஒரு தலைவர் இருந்திருந்தால் என்னைப் பாராட்டியிருப்பார் என பிரதமர் மோடி காமராஜரையே குறிப்பிட்டுச் சொன்னார்.
காமராஜர், பள்ளிக் குழந்தைகளின் பசியைப் போக்கி படிப்பைத் தந்தவர். அனைவருக்கும் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டுமென்பதே அவரது நோக்கம். இன்று புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவதும் அனைவருக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று காமராஜரின் நோக்கத்தின்படிதான்.
நவோதயா பள்ளிகள் அதிக பலனை மற்ற மாநிலங்களில் கொடுக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதையும் எதிர்க்கிறார்கள். கேரளாவில் நவதோயா பள்ளிகளில் படித்த மாணவர்கள் குறைந்த செலவில் படித்து நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இங்கு மட்டும்தான் பெயர் இந்தியில் இருக்கிறது என்று கூறி நவோதயா பள்ளிகளை எதிர்க்கின்றனர்.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக என தமிழகத்தில் எல்லா கட்சிகளும் மக்கள் வளர்ச்சிக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள். எந்த விதத்திலும் வளர்ச்சி வரக்கூடாது என அரசியல் செய்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையை சூரிய கட்சிக்காரரும் விமர்சிக்கிறார்; சூர்யாவும் விமர்சிக்கிறார். ஒரு விஷயத்தை ஆராயமலேயே எல்லோரும் விமர்சிக்கின்றனர். இப்போது திமுக ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அப்படியென்றால் இதற்கு முன்னதாக என்ன விமர்சனம் செய்தார்.
காமராஜர் வழியில் கல்வியை அனைவருக்கும் சமமாகக் கொடுப்பதுதான் புதிய கல்விக் கொள்கை. காமராஜர் மொழியை எதிர்த்ததில்லை. இதுதான் புதிய கல்விக் கொள்கை என்பதை வலியுறுத்துகிறேன். தமிழக அரசியல் கட்சிகளில் தமிழ் பற்று மேம்போக்கானது. இப்போதுகூட கீழடியில் தமிழகத்தின் தொன்மை வெளிவர மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. ஆனால் இங்குள்ளவர்கள் தமிழ் பற்று என்று எல்லாம் வெளிவேஷம் போடுகிறார்கள்" என்றார்.