Published : 15 Jul 2019 10:52 AM
Last Updated : 15 Jul 2019 10:52 AM

கல்விக் கொள்கை: சூர்யாவின் பேச்சு வன்முறையைத் தூண்டுகிறது- எச்.ராஜா விமர்சனம்

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். 

உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா,
''நடிகர் சூர்யா ஒரு விழாவில் பேசும்போது சொல்கிறார். நாம் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை உள்ளே வந்துவிடும் என்று. அதற்கு என்ன அர்த்தம்? மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது. வன்முறையாளராக இருக்கவேண்டும் என்றுதானே அர்த்தம். அப்படி அவர் பேசலாமா?

அது பொறுப்பான பேச்சா? மற்றுமொரு மொழி விருப்பப் பாடம் என்று சொன்னாலே, இஷ்டப்பட்டால் படிக்கலாம் என்றுதானே அர்த்தம்? எனில் எங்கே இருந்து திணிப்பு வருகிறது? அந்த 400 பக்கத்தில், நீங்கள் 4 வரியை ஒழுங்காகப் படித்திருக்கிறீர்களா? 

திமுக எம்.பி. கனிமொழி இந்தி படிக்கும்போது மக்கள் இந்தி படிக்கக்கூடாதா? இந்தி படிக்கக்கூடாது என்று சொல்லும் திமுகவினர் வீடுகளின் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றுகிற கூட்டத்தில் இருந்து தமிழகர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது'' என்றார் எச்.ராஜா.

முன்னதாக, அண்மையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள் 3 வயதிலே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும் ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி என்றும் விமர்சித்தார்.

''30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்து பேசவில்லை?'' என்றும் சூர்யா கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x