

கி.கணேஷ்
சென்னை
தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வளாக நீராதாரங்களை மேம்படுத்தி பயன்படுத்த சிப்காட் திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் சீரான தொழில் வளர்ச்சி யைக் கொண்டுவருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொடங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் சிப்காட் நிறுவனம் இதுவரை 32 ஆயிரத்து 4 ஏக்கர் பரப்பில், 12 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த அனைத்து அடிப் படை உள்கட்டமைப்பு வசதிகளு டன் கூடிய 21 தொழில் பூங்காக் கள், வளர்ச்சி மையங்கள் மற்றும் 7 சிறப்புப் பொருளாதார மண்ட லங்களை நிறுவியுள்ளது.
11 புதிய தொழில் பூங்காக்கள்
மேலும் 8 ஆயிரத்து 785 ஏக்கர் பரப்பில் 11 புதிய தொழில் பூங்காக்களை நிறுவ காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, விழுப்புரம், திருச்சி, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர் மாவட்டங் களில் நில எடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.
சிப்காட் தொழில் பூங்காக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொறுத்தவரை அதன் வளாகங்களில் சொந்த நீர் ஆதாரங்கள் இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் தொழிற் சாலைகள் அமையும்போது நீர் தேவையும் அதிகரிக்கிறது. அதற் காக பல்வேறு நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை அரசு வழங்கி வருகிறது.
இருப்பினும் வறட்சிக் காலங்க ளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது, தேவையைப் பூர்த்தி செய்வது கடினமாகி விடுகிறது. எனவே, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க மாற்று ஆதாரங் களைத் தேட வேண்டியதன் அவசியம் சிப்காட் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.
கழிவு நீர் சுத்திகரிப்பு
ஏற்கெனவே, இருங்காட்டுக் கோட்டை, பெரும்புதூர், ஒரக டம், பிள்ளைப்பாக்கம் மற்றும் வல்லம்-வடகால் ஆகிய தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேடு பகுதியில் தினசரி 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட, 3-ம் நிலை சவ்வூடு பரவல் முறையில் கழிவுநீரை சுத்திகரித்து குழாய் மூலம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதற் கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் இத் திட்டம் செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.
இதேபோல், தொழில் பூங் காக்கள் அமைந்துள்ள மாநகராட் சிகளை ஒட்டிய பகுதிகளில், அங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து, தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு பெறவும் சிப்காட் திட்டமிட்டுள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் சிப்காட் நிர்வாகம் முடிவெடுத்து, கடற்கரையோரப் பகுதிகளில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது.
இத்திட்டத்தின் ஒருபகுதியாக, கடலூர் தொழில் பூங்காவில் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு தினசரி 20 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைப்பதற்கு ரூ.1 கோடியே 75 லட்சத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக தொழில்துறை அறிவித்துள்ளது.
இதுதவிர, தூத்துக்குடியில் தினசரி 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.634 கோடியில் செயல்படுத் தப்படும் என்று முதல்வர் பழனி சாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ராமநாதபுரம் திருவாடானை வட்டம், மணக்குடி கிராமத்தில் 225 ஏக்கரில் ஒருங் கிணைந்த ஜவுளிப்பூங்கா சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப் படுகிறது. இப்பூங்காவில் அமைய உள்ள 30 ஜவுளி நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீரைப் பெற, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டுப் பணி தற்போது நடந்து வருகிறது.
இவைதவிர, தொழில் பூங்காக் களின் உள்ளேயும் சுற்றிலும் அமைந்துள்ள நீர் நிலைகளின் ஆதாரப் பகுதிகளில் இருந்து மறுசுழற்சி முறையில் தண்ணீரைப் பயன்படுத்தவும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக சிப்காட் நிறுவனத் துக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர்வளத் துறை மற்றும் ஐஐடியின் உதவி கோரப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகள்
இதுதொடர்பாக தொழில்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நிலத் தடி நீர் வளம் உள்ள பகுதிகளில் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீரைப் பெறுதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அதிக அளவில் நிறுவுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் சிப்காட் திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே, நாவலூரில் ஒரு ஏரியை சீரமைத்து அதில் தண்ணீரை அதிக அளவில் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், தொழிற்சாலைகள் அருகில் இருக்கும் நீராதாரங்களை அந்தந்த தொழிற்சாலைகளே சீரமைத்து அதில் தண்ணீரை அதிக அளவில் தேக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’’ என்றனர்.