தமிழகத்துக்கு பெருமையளிக்கும் வகையில் சந்திராயன் - 2 ஆய்வுக்கு உதவிய நாமக்கல் மண், சேலத்து இரும்பு

சந்திரயான் ஆராய்ச்சிக்காக, நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் அரியவகை மண் படிவத்தை எடுப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் எஸ்.அன்பழகன். (கோப்பு படம்)
சந்திரயான் ஆராய்ச்சிக்காக, நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் அரியவகை மண் படிவத்தை எடுப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் எஸ்.அன்பழகன். (கோப்பு படம்)
Updated on
2 min read

தமிழகத்துக்கு பெருமையளிக்கும் வகையில், சந்திரயான் -2 விண் கலத்தின் நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு நாமக்கல்லின் மண்ணும், சேலத்தின் இரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி விண்ணில் ஏவுகிறது. சந்திரயானில் அனுப்பப்படும் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் இறங்கியதும், குறிப்பிட்ட நேரத்துக்குப்பிறகு, அதில் இருந்து சிறிய ரோபோட்டிக் வாகனமான ரோவர் வெளியேறி, நிலவின் மேற்பரப்பில் உள்ள சமவெளியில் நாற்புறமும் ஓடி, ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.

இதற்காக, நிலவின் மேற்பரப் பினை ஒத்த, மண்ணைக் கொண்ட செயற்கையான தரைதளத்தை பூமியில் ஏற்படுத்தி, அதில் லேண் டரை பாதுகாப்பாக இறக்கி, பின்னர் அந்த மண் பரப்பில் ரோவரை இயக்கி ஆராய்ச்சி செய்வதற்கு இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக, நிலவின் மண்ணில் உள்ள தாது உப்புகள், ஆக்சைடுகள் ஆகிய வற்றை ஒத்த ரசாயன குணம் கொண்ட மண், டன் கணக்கில் இஸ்ரோ-வுக்கு தேவைப்பட்டது. அமெரிக்காவில் நிலவின் மண் மாதிரியை வாங்கியபோது அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவி தகவல் மற்றும் கோளியியல் மையம் இயக்குநர் பேராசிரியர் எஸ்.அன்ப ழகன் தலைமையில் பேராசிரியர்கள் அறிவழகன், பரமசிவம், சின்னமுத்து ஆகியோரைக் கொண்ட குழுவினர், இஸ்ரோ ஆராய்ச்சி மைய பேராசிரியர் வேணுகோபால் தலை மையிலான குழுவினருடன் இணைந்து, சுமார் 50 டன் அளவுக்கு நிலவின் மண் மாதிரியை, சந்திரயான்-2 ஆராய்ச்சிக்காக தயாரித்து கொடுத்துள்ளனர்.

இது குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவி தகவல் மற்றும் கோளியியல் மையம் இயக்குநர் பேராசிரியர் எஸ்.அன்பழகன் கூறியதாவது:

இஸ்ரோ-வுக்கு சுமார் 50 டன் அளவுக்கு நிலவின் மண் மாதிரி தேவைப்பட்டது. இதை அமெரிக்கா விடம் இருந்து வாங்குவதற்கு சுமார் ரூ.25 கோடி வரை தேவைப்படும் என்ற நிலை இருந்தது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நிலவின் மண் மாதிரி குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து, இஸ்ரோ எங்களை அணுகியது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தாணே, தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த சித்தம்பூண்டி, கந்தம் பாளையம் ஆகிய இடங்களில் நிலவில் இருப்பது போன்ற அனார்த்சைட் வகை பாறைகள் இருக்கின்றன.

எனவே, நாமக்கல்லில் இருந்து அனார்த்சைட் பாறைகளை வெட்டி, அவற்றை பவுடர் போல, 25 மைக்ரான் அளவு பொடியாக அரைத்து, இஸ்ரோ-வுக்கு வழங்கினோம். 6 மாத காலத்துக்குள் இதனை எங்கள் குழு வழங்கியதற்கு, இஸ்ரோவிடம் பாராட்டு கிடைத்தது. நாமக்கல்லில் எடுக்கப்பட்ட மண் பரப்பின் மீது, சந்திரயான் விண்கலத்தில் லேண்டர் ரோவர் பூமியிலேயே மாதிரி ஆராய்ச் சியில் ஈடுபட்டது, தமிழகத்துக்கு பெருமையளிக்கக் கூடியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, சந்திரயான்-2 விண்கலத்தின் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்புக்கு கடுங் குளிரையும் தாங்கக்கூடிய நிலைப்படுத்தப்பட்ட (ஆஸ்டெனிக் வகை) ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் தேவைப்பட்டன. இந்த தகடுகளை இஸ்ரோ விஞ்ஞானி களுடன் இணைந்து, சேலம் உருக் காலை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் தயாரித்துக் கொடுத்து சாதனை படைத்துள்ளது. சந்திர யான்-2 விண்கலத்தின் கிரையோ ஜெனிக் இன்ஜினில், சேலம் உருக்காலையின் ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தகடுகள் பொருத்தப் பட்டிருப்பது, தமிழகத்தின் பெருமையை கூடுதலாக்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in