Published : 15 Jul 2015 12:27 PM
Last Updated : 15 Jul 2015 12:27 PM

பிஆர்பி மீது புகார் கொடுத்தவர் மீதே வழக்கு: டிஎஸ்பியிடம் சகாயம் விசாரணை

பிஆர்பி. கிரானைட் நிறுவனம் மீது புகார் கொடுத்தவர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளரிடம் சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரணை நடத்தினார்.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து 16-ம் கட்ட விசாரணையை உ.சகாயம் நடத்தி வருகிறார். இவரது உதவியாளர் பக்தவச்சலம் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.

இந்த அறைக்குள் யாரோ ஒருவர் நுழைந்து அவர் பயன்படுத்திய பொருட்களை தேடியுள்ளது தெரிந்தது. இது குறித்து சுற்றுலா மாளிகையை பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று சகாயத்திடம் விளக்கம் அளித்தனர். பக்தவச்சலத்துக்கு வேறு அறை ஒதுக்கப்பட்டது.

மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக இருப்பவர் தனபால். சகாயம் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து நேற்று தனபால் விசாரணைக்கு ஆஜரானார்.

இது குறித்து சகாயம் ஆய்வுக்குழு அலுவலர் கூறுகையில், 2010-ல் பிஆர்பி நிறுவனம் மீது அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் குவாரி முறைகேடு தொடர்பாக புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரிக்காமலேயே, புகார் அளித்தவர் மீதே கத்தியை காட்டி பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சமயத்தில் அண்ணாநகர் உதவி ஆணையராக இருந்ததால் தனபாலிடம் சகாயம் விசாரணை நடத்தினார். வழக்கு பதிய உத்தரவிட்டது யார், பொய்யான புகாருக்கு பின்னணியில் யாரும் இருந்தனரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை சகாயம் கேட்டுள்ளார்' என்றார்.

தனபால் கூறுகையில், 'ஒரு நாள் அண்ணாநகர் உதவி ஆணையராக பொறுப்பில் இருந்தேன். இதற்காக விசாரணைக்கு வரவேண்டும் என அழைத்ததால் ஆஜரானேன்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x