Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

என்னை வாழவைத்த தெய்வம் எம்ஜிஆர்: வேலூரில் துரைமுருகன் பரபரப்பு பேச்சு

“என்னை வாழவைத்த தெய்வம் எம்ஜிஆர்” என வேலூரில் நடந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அறிமுக கூட்டம் மற்றும் திமுக செயல்வீரர்கள் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடந்தது. தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டி, மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி,

மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, முன்னாள் மேயர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:

வேலூர் தொகுதிக்கு சீட் கேட்டு விண்ணப்பித்தவர்களில் ஒருவர் என் மகன் கதிர் ஆனந்த். மற்றொருவர் என் சகோதரர் அப்துல் ரஹமான். இதில், என் சகோதரருக்கு சீட் கிடைத்தது. என் வாழ்க்கையில் எப்போதும் கோஷ்டி கிடையாது. கோஷ்டி வைத்தவன் உருப்படமாட்டான்.

எம்ஜிஆர் என்னை வளர்த்து படிக்க வைத்தார். என் திருமண பத்திரிகையை எம்ஜிஆரிடம் கொடுத்து, திருமணத்திற்கு வரவேண்டும், என தெரிவித்தேன். என்னை கட்டியணைத்த எம்ஜிஆர், எனக்கு 25 பவுனில் செயினை அணிவித்தார். திமுக என் உயிர் மூச்சு. எம்ஜிஆர் என்னை வாழவைத்த தெய்வம். என்னை ஆட்டிப் பார்க்க வேண்டும் என யாரும் நினைக்க வேண்டாம். கருணாநிதிக்குப் பிறகு மூத்த அரசியல்வாதி நான்தான். 15 ஆண்டுகள் அமைச்சராக இருந்திருக்கிறேன்.

வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவந்தது, பொன்னை குடிநீர் திட்டம், வேலூர்- காட்பாடி இடையிலான பழைய மற்றும் புதிய பாலங்கள், புதிய பேருந்து நிலையம், வேலூர் மாநகராட்சியாக அறிவித்தது எல்லாம் கருணாநிதிதான். இதனை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அப்துல் ரஹ்மானின் வெற்றி என் வெற்றி” என்றார்.

பின்னர், நிருபர்களிடம் துரைமுருகன் கூறுகையில், “சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்து வெகு நாட்களாகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை அணி போட்டியிட்டாலும் எங்கள் அணி வெற்றிபெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x