

மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக தமிழக ஆளுநர் ரோசய்யா செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், ''தமிழகத்தில் அதிமுக அரசு மீது எழுந்துள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் கே.ரோசய்யாவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தோம். ஆனாலும், ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு பல மாநில ஆளுநர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
ஆனால், ரோசய்யா மட்டும் மாற்றப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதால் அவர் பதவியில் தொடர்கிறார். அதிமுக அரசு மீது அளித்த புகார் மனு குறித்து என்ன செய்வது என்பதை விரைவில் அறிவிப்போம்.
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மீது வரிசையாக ஊழல் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மின் வாரியத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனாலும், இது குறித்து முதல்வர் ஜெயலலிதா உள்பட யாரும் விளக்கம் அளிக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி போல மவுனமாக இருப்பதே சிறந்தது என ஜெயலலிதாவும் முடிவெடுத்துவிட்டாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் போல இதுவும் விஸ்வரூபம் எடுக்கும்.
பாஜக தலைவர் அமீத்ஷாவை அழைத்து காமராஜர் பிறந்த நாளை கொண்டாட சிலர் ஏற்பாடு செய்து வருகின்றனர். காமராஜர் பெயரை உச்சரிக்கக் கூட பாஜகவினருக்கு தகுதி இல்லை. என்னதான் முயற்சித்தாலும் தமிழகத்தில் பாஜக வளராது.
திமுகவுடன் கூட்டணி என நான் கூறவில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும். வரும் 23-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திருச்சி வருகிறார். காமராஜர் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 16 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அவர் உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்று இளங்கோவன் கூறியுள்ளார்.