

திருப்பூர் மாநகரில் தொடரும் குழந்தைகள் மரணத்தால், மக்களிடையே டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 8 வார்டுகளில் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர், நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காய்ச்சலால் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. இதுதொடர்பாக, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
5 மாதங்களுக்குப் பின், மாநகர மக்கள் மனதில் தற்போது மீண்டும் டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் சத்யா காலனி பகுதியைச் சேர்ந்த அப்சரா என்பவர் கூறியதாவது:
திருப்பூரில் சுகுமார் நகர், ஜம்ஜம் நகர், காயிதேமில்லத் நகர், சத்யா காலனி, கோம்பைத்தோட்டம், வெங்கடேஸ்வரா நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் நேற்று முன்தினம் இறந்தான். இரு வாரங்களுக்கு முன்பு நான்கரை வயது சிறுவன் இறந்தான். காய்ச்சலால் பலரும் திருப்பூர், கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப் பகுதியில், கடந்த 2 வாரங்களுக்குள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற முடியாத ஏழைக் குடும்பத்தினருக்கு, நிதி திரட்டி, தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப் பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் கூறும்போது, “அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் இல்லை; மர்மக் காய்ச்சல் என்று கூறுகிறார்கள். ஆனால், எந்தவிதமான மர்மக் காய்ச்சல் என்பதை கூற மறுக்கிறார்கள்.
இதனால், அரசு மருத்துவமனைக்குச் செல்ல மக்கள் தயங்குகிறார்கள். மாலை நேரங்களில் கொசு ஒழிக்க மருந்து தெளிப்பது, தினமும் குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்” என்றார்.
சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் கூறும்போது, “சிறுவன் இறந்தது குறித்த அறிக்கையில் வைரஸ் காய்ச்சல் என்று தான் குறிப்பிட்டுள்ளனர். கொசு ஒழிப்பு, அபேட் மருந்து தெளிப்பு என 39, 43, 44, 12 உட்பட 8 வார்டுகளில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள டெங்கு வார்டை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.