Last Updated : 14 Jul, 2015 03:51 PM

 

Published : 14 Jul 2015 03:51 PM
Last Updated : 14 Jul 2015 03:51 PM

அழிந்துவரும் திராவிட கட்டிடக்கலை: பாதுகாக்க அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர் கோரிக்கை

தமிழகத்தில் திராவிட இஸ்லாமியக் கட்டிடக்கலை அழிந்துவருவதாகவும், அதை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு வலியுறுத்தி உள்ளார்.

இஸ்லாமியக் கட்டிடக் கலைக்கு என்று பொதுவாக எந்தவித விதிகளும் கிடையாது. இஸ்லாம் மதம் பரவிய அனைத்து நாடுகளில் பள்ளிவாசல்களை கட்டும்போது அந்தந்த நாடுகளில் உள்ள கட்டிடக் கலைக்கு ஏற்ப கட்டுமானங்கள் கட்டப்பட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கடற்கரைப் பட்டினங்களில் 7-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் அதிகமான பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இவை அனைத்தும் திராவிட இஸ்லாமிய கட்டிடக் கலையைக் கொண்டிருந்தன.

தற்போது தமிழகத்தில் திராவிட இஸ்லாமியக் கட்டிடக் கலை முற்றிலும் அழியும் நிலையை நோக்கிச் செல்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு ’தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வரலாறு மிகவும் தொன்மையானது. ஏழாம் நூற்றாண்டில் வணிக நிமித்தமாக அரேபியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த அரபிகள் முஸ்லிம்களாக வந்தனர். பின்னர் தமிழகத்தில் தங்கி வணிகம் செய்து இங்குள்ள பெண்களை மணந்து கடற்கரைப் பட்டினங்களை உருவாக்கினார்கள்.

கல்வெட்டுப் பதிவுகள்

திருச்சி உறையூர் கல்லுப்பள்ளியை அங்குள்ள பழமையான அரபிக் கல்வெட்டு மூலம் கி.பி 734-ம் ஆண்டு அப்துல்லா பின் முகம்மது அன்வர் கட்டியதாக அறிய முடிகிறது.

காயல்பட்டினத்தில் உள்ள கருப்புடையார் பள்ளிவாசல் கல்வெட்டில் வீரபாண்டியன் மன்னர் (கி.பி. 946-966) நிலம் அளித்த தகவலும், திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் கல்வெட்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மன்னர் (கி.பி. 1238-1257) முஸ்லிம் பள்ளிவாசலுக்கு நிலம் அளித்த தகவலும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் பள்ளிவாசல்கள், தர்காக்களுக்கு ஏராளமான நிலக் கொடைகள் அளித்துள்ளதை கல்வெட்டுச் செய்திகள் பதிவு செய்துள்ளன.

தமிழகத்தில் இருந்து 1980-களுக்குப் பின்னர் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் அங்குள்ள பள்ளிவாசல்களைப் பார்த்து, தமிழகத்தில் இருந்த திராவிட இஸ்லாமியக் கட்டிடக் கலை பாணியில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல்களை வளைகுடா பள்ளிவாசல்கள் பாணியில் கட்டத் தொடங்கினர். இதனால் திராவிட இஸ்லாமிய கட்டிடக்கலை முற்றிலுமாக அழியத் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் கடற்கரைப் பகுதியில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கடற்கரைப் பள்ளி முஸ்லிம் அடக்கஸ்தலத்துக்கு மத்தியில் முற்றிலும் பராமரிப்பின்றி பாதி புதைந்த நிலையில் காணப்படுகிறது.

அதேபோன்று ராமேசுவரம் அருகே வேதாளையில் உள்ள 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதி மன்னர்கள் காலத்து கல்லுப்பள்ளியும் இடியும் நிலையில் உள்ளது.

இத்தகைய பழமையான திராவிட இஸ்லாமிய கட்டிடங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பழமையான தொல்லியல் சின்னங்களை தமிழகத்தில் பாதுகாக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x