Published : 22 May 2014 10:00 AM
Last Updated : 22 May 2014 10:00 AM

பள்ளி வாகனங்களில் அமைச்சர் ஆய்வு: 487 வாகனங்களுக்கு நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் கடந்த 8-ம் தேதி முதல் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்த ஆய்வுநடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 8,735 வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருந்த 487 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயக்கப்படும் 36,389 பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து 33 சிறப்புக் குழுக்கள் மூலம் கடந்த 8-ம் தேதி முதல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த தேதிகளில் ஆய்வு நடத்த வேண்டுமென போக்குவரத்துத் துறை ஆணையரகம் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களுக்கு அறிவிப்பை அனுப்பியுள்ளது. இதன்படி, ஆர்.டி.ஓ.க்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. சார்பில் நந்தனம் கலைக் கல்லூரியில் சுமார் 25 பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதன்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு வாகனங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது, போக்குவரத்துத் துறை ஆணையர் பிரபாகரராவ், இணை ஆணையர் விஜயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் 16 சிறப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த அனைத்து ஆர்.டி.ஓ.க்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். இதுவரையில் மொத்தம் 8,735 வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. அதில், 487 வாகனங்களில் அவசர கதவுகளில் குறைபாடு, வாகன படிகள் சரியின்மை, தீயணைப்புக் கருவிகள் இயங்காதது, ஹேண்ட் பிரேக் தரமின்மை உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த 487 வாகனங்களுக்கும் பாதுகாப்பை மேம்படுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறைபாடுகளை சரிசெய்து வரும் வாகனங்களுக்கு தகுதிச்சான்று (எப்.சி) வழங்கப்படும். வரும் 31-ம் தேதி வரையில் வாகனங்கள் ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x