Published : 05 Jul 2015 11:19 AM
Last Updated : 05 Jul 2015 11:19 AM

மரங்கள் வெட்டப்படுவது குறித்து புகார் அளிக்க புதிய செயலி: சவும்யா அன்புமணி அறிமுகம் செய்தார்

மரங்கள் வெட்டப்படுவது குறித்து புகார் அளிக்க வசதியாக புதிய செல்பேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ கிரீன் ஷாடோ’ (உயிர் நிழல்) என்ற அந்த செயலியை பசுமை தாயகத்தின் தலைவர் சவும்யா அன்புமணி, லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தார்.

இந்த செயலியை மாக்ட் இந்தியா (MACT INDIA) என்ற அமைப்பு வடிவமைத்துள்ளது. இதை செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் மரங்கள் வெட்டப்படும்போது செயலின் மூலமாக புகார் அளிக்கலாம். உடனடியாக அருகில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மாக்ட் இந்தியா அமைப்பு தகவல் சொல்லும். அவர்கள் உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று மரம் வெட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த செயலியின் அறிமுக விழாவில் பங்கேற்று பேசிய சவும்யா அன்புமணி, “20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் காலை நேரத்தில் கேட்ட பறவைகளின் குரல்கள் இன்று கேட்பதில்லை. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதற்கு பதிலாக வீட்டுக்கொரு ஏசி வைத்திருக்கிறோம். சென்னையில் 9.5 சதவீத நிலப் பரப்பில் மட்டுமே மரங்கள் உள்ளன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூரூ உள்ளிட்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும். மரங்களை காப்பதற்கும் மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கும் ‘மரங்கள் ஆணையம்’ வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ‘பூமி டேல்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான இயற்கை கதை நூலை குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் ஆர்.வித்யாசாகர் வெளியிட்டார். இதில் 25 தமிழ் நாட்டுப்புற கதைகளை எளிய ஆங்கிலத்தில் பேராசிரியர் மேரி வித்யா பொற்செல்வி மொழிபெயர்த்துள்ளார். மாக்ட் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் சிரில் அலெக்சாண்டர், லயோலா கல்லூரி பேராசிரியர் எஸ்.வின்செண்ட் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x