

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் 21-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிவாஜி சமூகநலப் பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன், சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 0.65 சென்ட் நிலத்தை தமிழக அரசு 2002-ம் ஆண்டு இலவசமாக வழங்கியுள்ளது.
சென்னையில் அடையாறு சத்யா ஸ்டூடியோவுக்கு அருகில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் 2005-ம் ஆண்டில் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது பூமி பூஜை போடப்பட்டது. அதன் பிறகு மணிமண்டபம் கட்டுவதற் கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை நடிகர் சங்கத்திடம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை வைத்தும், இதுகுறித்து தொடர்ந்து பேசியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிவாஜி மணிமண்டபத்தை தமிழக அரசே கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வருக்கு மே 28-ம் தேதி மனு அளித்தோம்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சிவாஜி நினைவு நாளான ஜூலை 21-ம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறோம். உண்ணா விரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா நிர்வாகிகள் கலந்துகொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.