

வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள், திரைப்பட இயக்குநர் ஜனநாதன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார். அவரை திரைப்பட இயக்குநர் ஜனநாதன், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
பின்னர், இயக்குநர் ஜனநாதன் கூறும்போது, ‘‘தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்து கொண்ட புறம்போக்கு படம் இந்த சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படம் குறித்த விமர்சனங்கள் குறித்து அற்புதம்மாள் மற்றும் படத்தைப் பார்த்த சிறை காவலர்கள் சிலர் பேரறிவாளனுக்கு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வேலூர் சிறையில் கைதிகளுக்கான தொலைபேசி வழியாக என்னிடம் 8 நிமிடங்கள் பேசினார். புறம்போக்கு படம் குறித்து பாராட்டு தெரிவித்ததுடன் நேரில் சந்திக்க விரும்பினார்.
2 ஆண்டுக்கு முன்பு இந்தப் படம் வெளியாகி இருந்தால் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றார். பேரறிவாளன் தொடர்பாக படம் எடுப்பதற்கான எண்ணம் இப்போது இல்லை. எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் படம் எடுப்பேன்’’ என்றார்.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறும்போது, ‘‘மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பேரறிவாளன் தெரிவித்தார். ஒரு மாதம் கழித்து மீண்டும் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். சீக்கிரம் விடுதலை ஆகிவிடுவேன் என நம்பிக்கையுடன் இருக்கிறார். சட்டப்படியாக அவரை வெளியில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிகப்படியான தண்டனையை இவர்கள் அனுபவிக்கிறார்கள்’’ என்றார்.
வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை சந்தித்துவிட்டு வந்த அவரது தாயார் அற்புதம்மாள், திரைப்பட இயக்குநர் ஜனநாதன்.