Published : 10 Jul 2015 08:45 AM
Last Updated : 10 Jul 2015 08:45 AM

பழநி-கொடைக்கானல் சாலையில் மண்சரிவு: சுற்றுலாப் பயணிகள் நடுவழியில் பரிதவிப்பு

பழநி - கொடைக்கானல் சாலையில் நள்ளிரவு திடீரென்று மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனால், இரவு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் நடுவழியில் பரிதவித்தனர்.

கொடைக்கானல் செல்வதற்கு வத்தலகுண்டு வழியாக செல்லும் காட்ரோடு, பழநி வழியாக செல்லும் பழநி - கொடைக்கானல் சாலை ஆகிய இரு சாலைகள் உள்ளன. இதில், வத்தலகுண்டுவில் இருந்து செல்லும் கொடைக்கானல் காட்ரோடு ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் வந்து செல்லக்கூடிய வகையில் விசாலமாக உள்ளது. பழநி -கொடைக்கானல் சாலையில் ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்ல முடியும். எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் வாகனங்கள் நின்று மெதுவாக ஒதுங்கித்தான் செல்ல முடியும். அபாயகரமான 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11-வது கொண்டை ஊசி வளைவில் பழநியில் இருந்து 20-வது கி.மீ. தூரத்தில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் பெரும்பாலான பகுதிகள் சரிந்து பள்ளத்தாக்கில் விழுந்தன. நள்ளிரவு வந்த வாகனஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு வந்ததால் அதிர்ஷ்டவசமாக மண்சரிவு ஏற்பட்டதை கண்டு பிடித்துவிட்டனர். அதனால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கள் உடனடியாக பழநி - கொடைக் கானல் சாலை வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் போக்கு வரத்தை தடை செய்தனர். அத னால், சுற்றுலா பயணிகள் இரவு முழுவதும் தவித்தனர். நேற்று காலை முதல் மண்சரிவு ஏற்பட்ட சாலையை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், முழுமை யாக சீரமைக்கப்படாததால் நேற்று மதியம் வரை போக்குவரத்து தொடங்கவில்லை. மாலை முதல் போக்குவரத்து செயல்பட தொடங்கினாலும், மண்சரிவு காரணமாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சமடைந்ததால் பழநி - கொடைக்கானல் சாலை வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x