

மதுராந்தகத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தை கட்சியின் வெள்ளிவிழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கவுரவ கொலைகளை தமிழக அரசு ஆதரிக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில், இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள் விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெள்ளிவிழா பொதுக்கூட்டம் திருமாவளவன் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், ''தமிழகத்தில் தினமும் நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், ஜாதி படுகொலைகளை பார்க்கும்போது, காவல்துறை செயல்படுகிறதா என தெரியவில்லை.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளைஞனின் தோளில், கட்சித் தலைவர் ஒருவர் கை போட்டதற்கு அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர், கோகுல்ராஜ் படுகொலைக்கு ஏன் அறிக்கை வெளியிடவில்லை. தமிழகத்தில் திட்டமிட்டே ஜாதி பிரச்சினையை தூண்டுகிறார்கள். திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான்.
கோட்டையை பிடிக்கவும், தகுதியில்லாதவர்களும் தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். முதல்வர் பதவிக்கு யாருக்கு தகுதியுள்ளது என்பதை பார்க்க பரிட்சை வையுங்கள். அப்போது தெரியும், யாருக்கு தகுதியுள்ளது உள்ளது என்று. நாங்கள் பரிட்சைக்கு தயார்'' என்று திருமாவளவன் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘கவுரவ கொலைகளை கண்டித்து வரும் 13-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கவுரவ கொலைகளை தடுக்க தனி சட்டம் ஏற்படுத்த வேண்டும் என 21 மாநிலங்கள் பரிந்துரை செய்துள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் எந்தவிதமான கருத்துகளையும் பரிந்துரைக்கவில்லை. இதனால், தமிழக அரசு கவுரவ கொலைகளை ஆதரிக்கிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினார்.