

கை, கால்கள் செயல் இழந்து படுத்த படுக்கையாக இருக்கும் மனைவியை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு கணவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சுகாதாரத் துறை செயலர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை வட்டம், பூவாலூரைச் சேர்ந்த பி.மதிவாணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
என் மனைவி சுமதி(33). எங்க ளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். என் மனைவிக்கு கடந்த ஆண்டு திடீரென கை, கால்கள் செயல்படாமல் போனது. அவரை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறினர். அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல என்னிடம் போதிய வசதியில்லை.
இதனால் அரசு செலவில் என் மனைவியை சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
என் மனைவியை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சேர்த்து அவர் குண மடையும் வரை அரசு செலவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகா தேவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மனுவுக்கு சுகாதாரத் துறை செயலர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.