

தமிழக அரசின் நதிநீர் இணைப் புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவ துடன், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
நதிகள் இணைப்பு தொடர்பான சிறப்புக் குழுவின் 5-வது கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தண்ணீர் தேவை அதிகம் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு நதிநீர் இணைப்பு அவசியம். எனவே, தென்மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க வேண் டும் என்று தமிழக முதல்வர் ஜெய லலிதா பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2003 ஏப்ரல் 16-ம் தேதி நதிகள் இணைப்பு தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டுவர அதற்கான பணிக் குழு தலைவரை அவர் வலியுறுத்தினார்.
இந்திய தீபகற்பத்தில் ஓடும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைக்க ஏதுவாக சட்டத்திருத்தம் அமைய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
நதிகள் இணைப்புக்கு முன்னு ரிமை என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதுடன், தமிழகம் போன்ற தண்ணீர் பற்றாக் குறை மாநிலங்களுக்கு அதிக தண்ணீர் கிடைக்க வேண்டும். அதே நேரம் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் ஒப்பந்தங் களை பாதிக்காமல் நதிகள் இணைப்பை செயல்படுத்த வேண் டும் என்பதே முதல்வர் ஜெயலலிதா வின் எண்ணம்.
தமிழகத்தின் தென் மாவட்டங் களுக்கு பயனளிக்கும் வகையில் வைப்பாறு படுகையில் பம்பா, அச்சன்கோவில் ஆகிய மேற்கில் பாயும் நதிகளிலிருந்து கிடைக்கும் 22 டிஎம்சி நீரை திருப்பிவிட வேண் டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளன.
இந்த இணைப்புத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண் டும். தற்போது வரை இந்த 2 ஆறு களில் இருந்து உபரிநீர் வீணாக அரபிக்கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை தமிழக தென் மாவட் டங்களுக்கு பயன்படுத்த முடியும்.
பெண்ணாறு (சாத்தனூர் அணை) - பாலாறு, பெண்ணாறு (நெடுங்கல் அணை) - பாலாறு, காவிரி (மேட்டூர் அணை) - சரபங்கா, அத்திக்கடவு - அவிநாசி வெள்ள வடிகால் திட்டம் மற்றும் தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு ஆகியவை தமிழக அரசின் திட்டங்கள்.
இத்திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே வலியுறுத்தியபோது, முந்தைய மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. எனவே, இந்த திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து, நிலம் கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு வசதியாக நதிகள் இணைப்புக்கு அமைக்கப் பட்டுள்ள 2 துணைக் குழுக்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழுக்களுக்கு, பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக தொடங்க அறிவுரை வழங்க வேண்டும்.
ஆரம்ப கட்ட பணிகள்
எனவே, கடந்த 2012-ல் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு மற்றும் தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று நதிகள் இணைப்புக்கான சிறப்பு குழுக் களின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நதிகள் இணைப்புக் கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.