Published : 23 Jul 2015 11:37 AM
Last Updated : 23 Jul 2015 11:37 AM

ஐபிஎல், வியாபம் ஊழல் விவகாரத்தில் திராவிட கட்சிகள் மவுனம் ஏன்?- காரத் கேள்வி

ஊழல் விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட பாஜக அரசு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று மாலை நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலால் அதிர்ச்சியடைந்த மக்கள் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், ஊழல் விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட பாஜக அரசு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.

திராவிட கட்சிகள் மவுனம் ஏன்?

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ஐபிஎல், வியாபம் ஊழல்கள் குறித்து வாய் திறக்கவில்லை. ஊழல் என்ற வார்த்தையை கேட்டால் ஒரு குற்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுவதுதான் காரணம். இடதுசாரி கட்சிகள் மட்டுமே ஊழல் கறையின்றி உள்ளது. எனவே, ஊழலை தட்டிக்கேட்கும் தகுதி எங்களுக்கு மட்டுமே உள்ளது என்றார்.

முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்:

முன்னதாக கோவை விமன நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வியாபம் ஊழலில் தொடர்புடைய அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக, ஊழல் குறித்து முறையான விசாரணை நடைபெறுவதற்கு அந்த மாநில முதல்வர் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.

விவசாயிகளை பாதிக்கக்கூடிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. அந்த மசோதாவை கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து திரும்பப் பெற வைப்போம். ஆனால், அதற்கு முன்பாகவே மத்திய அரசு அந்த மசோதாவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஊடக சுதந்திரத்தை முடக்குவது என்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல். தவறான முன்னுதாரணமாக அமையும். இந்த போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x