Published : 03 Jul 2015 08:00 AM
Last Updated : 03 Jul 2015 08:00 AM

ஆம்பூர் கலவரம் தொடர்பாக மேலும் 8 பேர் கைது: பின்னணி குறித்து மத்திய உளவுப் பிரிவு போலீஸார் விசாரணை

ஆம்பூர் கலவரம் தொடர்பாக மேலும் 8 பேரை போலீஸார் கைது செய்தனர். கலவரத்துக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது குறித்து மத்திய உளவு பிரிவு அதிகாரிகளும் ஷமீல் அஹ்மது மரணம் தொடர்பாக பள்ளிகொண்டா போலீஸாரிடம் சிபிசிஐடி போலீஸாரும் விசாரணையை தொடங்கி யுள்ளனர்.

பவித்ரா என்ற பெண் காணாமல் போன வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம்பூர் இளைஞர் ஷமீல்அஹ்மது கடந்த 26-ம் தேதி சென்னையில் உயிரிழந்தார். இதைக் கண்டித்தும், அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஆம்பூரில் கடந்த மாதம் 27-ம் தேதி கலவரம் நடந்தது.

வாகனங்களுக்கு தீ வைப்பு

இதில் போலீஸார் உட்பட பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். பொதுமக்கள் சொத்துகளும் சூறையாடப்பட்டன. போக்குவரத்து வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து கலவரத்துக்கு காரணமான நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில், ஷமீல்அஹ்மது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே, ஆம்பூர் கலவரத் துக்கு முக்கிய காரணம் என்ன? ஷமீல்அஹ்மது உயிரிழப்புதான் கலவரத்துக்கு காரணமா? கலவரத் துக்குப் பின்னணியில் இருந்தது யார்? என்பது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஷமீல் அஹ்மது பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஷமீல் அஹ்மது வேலை பார்த்த நிறுவனம், காணாமல் போனதாகக் கூறப்படும் பவித்ரா குறித்தும் உளவுத்துறை அதிகாரிகள் விவரங்களை சேகரித்தனர்.

8 பேர் கைது

இதற்கிடையே, கலவரத்துக்கு காரணமான ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் (23), இக்பால் (22), இம்ரான் (23), அனு (24) உட்பட 8 பேரை ஆம்பூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.

சிபிசிஐடி போலீஸார் விசாரணை

ஷமீல் அஹ்மது மரணம் தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார் 5 பேரிடம் சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி நேற்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து, போலீஸார் கூறும்போது, ‘‘கடந்த 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை பள்ளிகொண்டா காவல் நிலைய பணியில் இருந்த 5 போலீஸாரிடமும் எஸ்பி விசாரணை நடத்தினார். விரைவில் காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x