

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் அனுமதிக்கப்பட அளவை விட அதிகமாக மாசடைந்திருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய பதிவாளர் அமர்வில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக காவிரி விளங்குகிறது. இதில் கழிவுநீரை கலப்பதாக கர்நாடக சட்டப்பேரவையில் பாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி நீரில் கழிவுநீரை கலப்பதால் அதை பயன்படுத்தும் தமிழக மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதனால் காவிரி நீரில் கலக்கப்படும் கழிவுநீரை கர்நாடக அரசு தடுத்து நிறுத்த அம்மாநில அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் பேரில், கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி ஆய்வு மேற்கொண்ட மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய பதிவாளர் அமர்வில் கடந்த வாரம் ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூன் மாதம் காவிரி மற்றும் அர்க்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்திலிருந்து ஆறுகள் சங்கமிப்பதற்கு முன்பாக 200 மீட்டர் தொலைவிலும், சங்கமித்த பிறகு ஓடும் ஆற்றில் 200 மீட்டர் தொலைவிலும் நீர் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த மாதிரிகளில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள நீருக்கான தரநிர்ணய அளவை விட மாசு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது பெங்களூரு மாநகர பகுதியிலிருந்து அர்க்காவதி ஆற்றில் விடப்படும் மழைநீர், சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீரால் ஏற்பட்டிருக்கலாம்.
2015-ம் ஆண்டு நிலவரப்படி கர்நாடக மாநிலத்தில் நகர பகுதியில் நாளொன்றுக்கு உருவாகும் 1,304.16 மில்லியன் லிட்டர் அளவு கழிவுநீரை சுத்திகரிக்கும் திறனையே அம்மாநிலம் பெற்றுள்ளது. ஆனால் தினமும் 3,777 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகிறது. மீதமுள்ள 2,472.84 கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளில் விடப்படுகிறது. இதைத் தடுக்குமாறு கர்நாடக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் கடிதமும் அனுப்பியுள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.