

கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸிலி ருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமாகா-வை தொடங்கினார். உறுப்பினர் சேர்க்கை முடிந்து கடந்த மே 22-ம் தேதி மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களின் பட்டியலை வாசன் வெளியிட்டார்.
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு மூத்த துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இது தவிர 9 துணைத் தலைவர்கள், 20 பொதுச் செயலாளர்கள், 32 செயலாளர்கள், 32 இணைச் செயலாளர்கள், 25 கொள்கை பரப்புச் செயலாளர்கள், 70 செயற்குழு உறுப்பினர்கள், 14 அணிகளின் தலைவர்கள், 75 மாவட்டத் தலைவர்கள் என மொத்தம் 377 பேர் கொண்ட மெகா பட்டியலை வெளியிட்டார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்ட எஸ்.டி.நெடுஞ் செழியன், கடந்த 12-ம் தேதி தமாகாவில் இருந்து விலகி, மீண்டும் காங்கிரஸில் இணைந் துள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து' விடம் பேசிய நெடுஞ் செழியன், ‘‘காங்கிரஸில் உழைப்பவர்க ளுக்கு மரியாதை இல்லை. தலைவர்களுக்கு தெரிந்தவர் களுக்கு மட்டுமே பதவி கிடைக்கிறது. இந்த நிலையை மாற்றுவோம் என்று கூறிதான் வாசன் தமாகாவை தொடங்கினார். ஆனால், தமாகா ஒரு கட்சியாகவே செயல்படவில்லை. வேலூர் ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் என ஒரு சிலரின் பேச்சைக் கேட்டுகொண்டு வாசன் செயல்படுகிறார். கட்சிக்காக உழைப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் வாசன் வீட்டுக்கு வந்தவர்களுக்கு எல்லாம் பதவி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
தமாகாவில் வாசனின் உண்மை யான விசுவாசிகள் பலர் புறக்கணிக் கப்பட்டுள்ளதாக அதிருப்தி குரல் எழுந்துள்ளது. வேலூர் ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் ஆகியோர் தனி அணியாக செயல்படுவதாகவும், இவர்கள்தான் வாசனை இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமாகா மாநில நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கோவையில் தான் பரிந்துரைத்த சிலருக்கு பதவி வழங்கப்படாததால் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பரமணியன் அதிருப்தியில் இருக்கிறார். அவரை தொலைபேசியில் அழைத்துகூட வாசன் சமாதானப்படுத்தவில்லை. வாசனை சிலர் தவறாக வழி நடத்தி வருகின்றனர்'' என்றார்.
புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு 2 மாதங் களுக்குள் மாவட்டத் தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து வெளியேறியிருப்பது தமாகாவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.