Published : 28 Jul 2015 10:40 AM
Last Updated : 28 Jul 2015 10:40 AM

அண்ணா சாலையில் நடைபாதைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

அண்ணா சாலையில் நடைபாதைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

சென்னை

அண்ணா சாலையில் பாதசாரிகள் கடக்க போதிய அளவில் நடைபாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் ஆர்.சாந்தகுமார் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள முக்கியமான சாலையாக அண்ணா சாலை விளங்குகிறது. இந்த வழி யாக ஆயிரக்கணக்கான பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. பஸ் நிறுத்தங்களில் இருந்து சாலையை கடந்து செல்லும் வகையில் முக்கிய மான இடங்களில் நடைபாதை கள் அமைக்கப்பட்டு, அதற்கான சிக்னல்களும் அமைக்கப்பட்டிருந் தன. ஆனால், இப்போது சில இடங்களில் இவை செயல்படாமல் உள்ளன. மேலும், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், எந்தெந்த இடங்களில் சாலையைக் கடப்பது என்று தெரியாத நிலை உள்ளது.

குறிப்பாக பிளாக்கர் சாலை அருகே அண்ணா சாலையை கடந்து செல்லும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது சிக்னலும் இல்லை, நடைபாதையும் இல்லை. இதனால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொது மக்களின் நலன் கருதி போதிய அளவில் நடைபாதைகள், சிக்னல்களை அமைத்துத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அண்ணா சாலையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ பணிகள் முடிவடைந்தவுடன் நடைபாதைகள் அமைக்கப்படும். ஆனால், நடைபாதைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களை பொதுமக்கள் மதிப்பதில்லை. விதிகளை மீறிச் செல்வதால், மக்கள் சாலை விபத்துகளில் சிக்குகின் றனர். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும். சாலைகளில் மக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீ ஸார் இருந்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றனர்.

***

அஞ்சலகங்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் செல்லுமா?

சென்னை

தமிழகத்தில் கடந்த 2011-ல் அஞ்சலகங்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பத்தால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 2011-ல் மக்கள் தொகை பதிவேடு உடன் இணைந்து ஆதார் அட்டை வழங்கும் திட்டம் அமலில் இல்லை. அப்போது பலர் அஞ்சலகங்கள் மூலமாக ஆதார் அட்டை பெற்றனர். அதை ஆதார் அட்டை வழங்கும் நிறுவனமான யூஐடிஏஐ நேரடியாக வழங்கி வந்தது. அதன் பின்னர் தமிழக வருவாய்த்துறை வழிகாட்டுதலின் பேரில் மக்கள்தொகை பதிவேடு உடன் இணைந்து ஆதார் அட்டை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலகங்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் மக்கள்தொகை பதிவேட்டுடன் இணைக்கப்படாமல் பெறப்பட்டதால், இந்த அட்டைகள் செல்லுமா? செல்லாதா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு வாசகர் புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அஞ்சலகங்களில் ஆதார் அட்டை பெற்றவர்கள், தற்போது செயல்பட்டு வரும் ஆதார் நிரந்தர மையங்களில் மக்கள்தொகை பதிவேடு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, ஆதார் எண்ணை மக்கள் தொகை பதிவேட்டில் இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் பிற்காலத்தில் எந்த பிரச்சினையும் வராது’’ என்றார்.

விஏஓ பணிக்கு விரைவில் 2-வது கட்ட கலந்தாய்வு

சென்னை

கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பணிக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப உடனடியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் வாசகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த வாசகர்கள் உங்கள் குரல் சேவையில் கூறியதாவது: விஏஓ பணியில் 2,342 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தியது. அதன் முடிவு டிசம்பர் 15-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு பிப்ரவரி 12-ம் தேதி முடிவடைந்தது.

மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப விரைவில் 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப் படும் என்று சொல்கிறார்கள். முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து 5 மாதங்கள் ஆகிவிட்டன. விரைவில் 2-வது கட்ட கலந்தாய்வை நடத்தி காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "விஏஓ பணிக்கு விரைவில் அடுத்தகட்ட கலந்தாய்வு நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x