Published : 17 Jul 2015 08:46 AM
Last Updated : 17 Jul 2015 08:46 AM

ஹெல்மெட் கட்டாய உத்தரவுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கடந்த 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் ஹெல் மெட் அணியாதவர்கள் மீது 1.44 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹெல்மெட் அணியாதவர் களிடம் ஆவணங்கள் பறிமுதல் செய்ய தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் சிலர் முறையிட்டனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ்:

பெண்கள், 12 வயது வரையிலான குழந்தைகள், உடல்நிலை சரியில் லாதவர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களே ஹெல் மெட்டும் வழங்க உத்தரவிட வேண்டும். ஆவணங்கள் பறிமுதல் செய்யும் நடைமுறை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இமெயில் மூலமாகவும் கருத்து கேட்டு அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

வழக்கறிஞர் ராஜன்பாபு:

99% பேர் ஹெல்மெட்டை முகமூடி போலத்தான் அணிகிறார்கள். ஹெல்மெட்டுக்கான நிரந்தர வடிவமைப்பை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஹெல்மெட் எடை சுமார் 2 கிலோ வரை இருப்பதால் கழுத்துவலி ஏற்படுகிறது. அதன் எடையைக் குறைக்க வேண்டும்.

வழக்கறிஞர் காசிராமலிங்கம்:

நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தர வுகள், வழக்கு தொடர்பான தாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நீங்கள் தாமாக முன்வந்து ஹெல்மெட் கட்டாய உத்தரவை பிறப்பித்தது வரம்பு மீறல், சட்டவிரோதம்.

நீதிபதி:

முதலில் நீங்கள் முறைப்படி மனுதாக்கல் செய்துவிட்டு வாதிடுங்கள். ஹெல்மெட் வழக்கு தொடர்பாக இங்கு வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் முறையீடுங்கள்.

வழக்கில் தம்மையும் சேர்த்துக் கொள்ளும்படி மனுதாக்கல் செய்த ஜெஎஸ்என் நிம்மு வசந்த்:

வேகமாக வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால்தான் 99% பேர் இறக்கின்றனர். ஹெல்மெட் அணியாததால் 1% பேர் மட்டுமே இறக்கின்றனர்.

ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்த நாளன்று வெவ்வேறு விபத்துகளில் ஹெல்மெட் அணிந்த சிலர் உயிரிழந்தனர். ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவை வரவேற்கிறேன்.

ஆனால், ஆவணங்கள் பறிமுதல் போன்ற தண்டனையை எதிர்க்கி றோம். இதனால், வேலைக்கு செல்வோர், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன்:

கடந்த விசாரணையின்போது ஹெல்மெட் வழக்கு விசாரணைக்கு நீதிமன் றங்களில் முன்னுரிமை அளிக்கவும், நடமாடும் நீதிமன்றங்கள் எண்ணிக் கையை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டேன். அதை பரிசீலிக்க வேண்டும்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்:

ஹெல்மெட் அணிவதால் பக்கவாட்டில் பார்க்க முடிவதில்லை. காதும் சரியாக கேட்பதில்லை.

எனவே, ஹெல்மெட் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினோம். அந்த கடிதம் இந்திய தர நிர்ணய அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து எப்போது பதில் வரும் என தெரியவில்லை.

நீதிபதி என்.கிருபாகரன்:

ஹெல்மெட் கட்டாயம் என்று நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இப்போதும் அதுபோல எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப உத்தரவை மாற்றினால் அது சட்டமாகாது. இங்கு வாதங்களில் கூறிய கருத்துகளை மனுவாக தாக்கல் செய்யுங்கள். அப்போது பரிசீலிக்கப்படும்.

ஆர்.சி.பால்கனகராஜ்:

அதுவரை ஹெல்மெட் கட்டாய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு வாதம் நடந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x