

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஓடும் பஸ்ஸில் தாய், மகனை 6 பேர் கொண்ட கும்பல் நேற்று வெட்டிக் கொலை செய்தது.
காரைக்குடி அருகே உள்ள வலங்காவயலைச் சேர்ந்த காசி என்பவரின் மனைவி சிவகாமி (63). இவர்களது மகன் சரவணன் (39). சரவணனுக்கும், செல்வநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த காசி என்ப வரது மகள் பாண்டிமீனாள் என்பவ ருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பாண்டிமீனாளை, சரவணன் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், சரவணன், அவரது தாய் சிவகாமி மீது ஆராவயல் போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த சரவணன், சிவகாமி ஆகியோர் காரைக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர். தற்போது பாலாவயலில் உள்ள சரவணனின் தங்கை வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காரைக்குடி நீதிமன்றத்துக்கு கையெழுத்திடுவதற்காக இரு வரும் வந்துள்ளனர். நேற்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதால் காரைக்குடியில் இருந்து தச்சக்குடி செல்லும் டவுன் பஸ்ஸில் திரும்பிச் சென்றுள்ளனர்.
அப்போது, மதியம் 1 மணியளவில் மலையந்தாவு நிறுத்தத்தில் சென்ற பஸ்ஸை 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். பின்னர், பஸ்ஸில் ஏறி சரவணன், சிவகாமி ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பஸ்ஸில் இருந்த பயணிகள் இதைக் கண்டு அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்து வந்த சிவகங்கை எஸ்பி துரை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். குற்றவாளிகளை கைது செய்ய டிஎஸ்பி முத்தமிழ் தலைமையில் சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. பாண்டிமீனாள் கொலைக்கு பழிக்குப்பழியாக, அவரது உறவினர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத் தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.