

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்த் திரையுலகில் தலை சிறந்த இசை அமைப்பாளர், என்னருமை நண்பர் எம்.எஸ்.விஸ்வநாதன் சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியினைத் தொடர்ந்து அவர் மறைந்து விட்ட செய்தியும் இன்று கிடைத்தது.
திரையுலகின் இசை அமைப்புத் துறையில் இரட்டையர்களாக எம்.எஸ். விசுவநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் நுழைந்த பிறகு தான் ஜனரஞ்சகமான பாடல்கள் மக்களிடையே பரவி மனம் கவர்ந்தன.
இந்த இரட்டையர்கள் இணைந்து இசையமைக்கத் தொடங்கிய பிறகு பல திரைப்படங்கள் இசைக்காகவே நீண்ட நாட்கள் ஓடின. சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு எம்.எஸ்.வி. இசை அமைத்திருக்கிறார்.
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய "நீராருங் கடலுடுத்த" என்று தொடங்கும் பாடலை, தமிழக அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக அமைத்துக் கொள்ளலாம் என்று நான் முதலமைச்சராக இருந்த போது முடிவெடுத்து, அந்தப் பாடலுக்கு இசையமைத்துத் தர வேண்டும் என நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் வழங்கிய நல்லிசை தான் இன்றளவும் எதிரொலித்துக் கொண்டுள்ளது என்பதை மறக்க முடியுமா?
மெல்லிசை மன்னர் என்ற பெயரைப் பெற்ற எம்.எஸ்.வி. பழகுதற்கு மிக இனியவர். அதிலும் என்பால் தனிப்பட்ட அன்பு கொண்டவர்.
வறுமை நிலையில் வாழ்க்கையைத் தொடங்கிய எம்.எஸ்.விஸ்வநாதனின் சகாப்தம் வியக்கத்தக்க உச்சிக்குச் சென்று முடிவடைந்து விட்டது. அவரை இழந்து வாடும் அவருடைய செல்வங்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.