

சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிடாமல் தாமதம் செய்வது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நலன் விளைவிப்பதாக ஆகாது என்பதால், உடனடியாக அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவில் சமூக - பொருளாதார - சாதி வாரியிலான முதல் கணக்கெடுப்பு 1934ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதற்குப் பிறகு தற்போது அதே மாதிரியிலான கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டில் தொடங்கி, 2013ஆம் ஆண்டில் முடிவடைந்து, அதற்கான அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதாவது 3-7-2015 அன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் உள்ள முக்கிய சில தகவல்கள்: "இந்தியாவில் நகரம், கிராமங்களில் 24.39 கோடி குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் கிராமங்களில் வாழ்வோர் 17.91 குடும்பங்கள். கிராமங்களில் உள்ள குடும்பங்களில் 10.69 கோடி குடும்பத்தினருக்கு எந்த வசதியும் இல்லை; படிப்பறிவும் இல்லை; பிழைப்புக்கே கஷ்டம் தான்.
எந்த அடிப்படை வசதியும், படிப்பறிவும் இல்லாத குடும்பங்களில் 5.37 கோடி குடும்பத்தினருக்குச் சொந்தமாக நிலமும் இல்லை; தினக்கூலியில் தான் இவர்கள் அன்றாடம் பிழைப்பு நடத்துகின்றனர். அதிலும், இவர்களில் 2.37 கோடி குடும்பத்தினருக்கு சொந்த நிலம் இல்லாதது மட்டுமில்லை. ஒரு அறை வீட்டில் தான் வசிக்கின்றனர். அதாவது குடிசையில் வசிக்கின்றனர்.
கொடுமையான விஷயம் என்னவென்றால், 4.08 லட்சம் குடும்பத்தினர் குப்பை சேகரித்து பிழைக்கின்றனர்; 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சை எடுத்துத் தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். 51 சதவிகிதம் குடும்பங்கள் சாதாரண கூலி வேலை செய்து தான் வாழ்க்கை நடத்துகின்றனர். 1 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 196 குடும்பங்கள் மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள். 6 லட்சத்து 79 ஆயிரத்து 128 பேர் மாற்றுத் திறனாளிகள் என்ற நிலையிலும், பிறர் உதவி ஏதுமின்றி தனிமையிலே வாழ்கின்றனர்.
7.05 கோடி குடும்பங்கள் அதாவது 39.39 சதவீத குடும்பத்தினருக்குக் குறைந்த பட்ச வருமானம் கூட இல்லை. அதாவது, இவர்கள் மாதம் பத்தாயிரம் கூடச் சம்பாதிக்க முடியவில்லை. இவர்களுக்கு சைக்கிள், இரு சக்கர வாகனம் இல்லை; மீனவர்களுக்கு மீன் பிடிக்க படகும் இல்லை. விவசாயிகளுக்கான கிரெடிட் கார்டும் தரப்படவில்லை.
56 சதவிகித குடும்பங்கள் சொந்த நிலம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். பாதிக்கு பாதி குடும்பங்கள் ஏதாவது ஒரு வகையில் புறக்கணிக்கப் பட்டவர்களாக உள்ளனர். சிலருக்கு நிரந்தர வேலை இல்லை. சம்பாத்தியம் இல்லை; விவசாய நிலம் இல்லை; கல்வி இல்லை என்று பல வகையில் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 1 கோடியே 67 ஆயிரத்து 849 வீடுகளில், 42.47 சதவிகிதக் குடும்பங்கள் நகர்ப் புறங்களில் வசிக்கிறார்கள். கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் 78.08 சதவிகித குடும்பங்களில் உள்ள அதிகம் சம்பாதிக்கும் உறுப்பினர் மாதம் ரூ. 5 ஆயிரத்துக்குக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். அந்தக் குடும்பங்களிலும் பல குடும்பங்களுக்கு பெண்களே வீட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள்.
அவர்களில் 85.58 சதவிகிதத்தினர் மாதம் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாகத் தான் சம்பாதிக்கிறார்கள். 55.80 சதவீதக் குடும்பங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத நிலையில் தினம் கூலி வேலைக்குச் சென்று தான் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
இவ்வாறு சமூக - பொருளாதார புள்ளி விவரங்களை வெளியிட்ட போது, தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவர் திரு. பிரனாப்சென், "தற்போது சமூகப் பொருளாதார புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறோம். எனினும் சாதி வாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த விவரங்கள் நாடாளுமன்றத்தில் உரிய நேரத்தில் வைக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இத்தனை விவரங்களை வெளியிட்டுள்ளவர்கள், சாரி வாரி கணக்கெடுப்பின் விவரங்களை மட்டும் நாடாளுமன்றத்தில் உரிய நேரத்தில் தெரிவிப்போம் என்று என்ன காரணத்தால் பின் வாங்குகிறார்கள் என்பது தான் நமக்குப் புரியவில்லை.
இதைப் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் கவுடா "சமூகப் பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ள சாதி வாரி விவரங்களை மத்திய அரசு வெளியிடவேண்டும்; உண்மை நிலவரங்களை மறைக்கவோ அல்லது அது போன்ற விவரங்கள் வெளிவராமல் தடுக்கவோ மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது; ஏழைகளின் நலன்களுக்கான முடிவுகளை வெளிப்படையாகவே எடுக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் சார்பில் அதன் தலைவர் நண்பர் லாலு பிரசாத் யாதவ் கூறும்போது, "சாதிவாரி கணக்கெடுப்பு எப்போதோ எடுக்கப்பட்டு விட்ட பிறகும், மத்திய அரசு திட்டமிட்டு அதன் விவரங்களை வெளியிடாமல் உள்ளது. அதனை வெளியிட வலியுறுத்தி 13-7-2015 அன்று பேரணி நடத்தவிருக்கிறேன்" என்று அறிவித்திருக்கிறார்.
தமிழகத்திலும் பாமக சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
"சமூகப் பொருளாதார சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையானது ஆழமான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தனது அறிக்கையில் அறிவித்திருக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று தொடக்கக் காலம் முதல் திமுக குரல் எழுப்பி வந்திருக்கிறது என்ற முறையில், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிடாமல் தாமதம் செய்வது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நலன் விளைவிப்பதாக ஆகாது என்பதால், உடனடியாக அந்த விவரங்களை வெளியிட வேண்டும்.
அந்த விவரங்களின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீட்டளவை மறு பரிசீலனை செய்து உயர்த்துதல், அவர்களுடைய சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துதல் போன்றவற்றில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.