Published : 02 Jul 2015 07:07 PM
Last Updated : 02 Jul 2015 07:07 PM

கட்டணத்தை குறைத்து மெட்ரோ – பறக்கும் ரயில் சேவைகளை இணைத்திடுக: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

குறைந்த கட்டணத்தின் மூலம் அதிக வருவாயை ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை பறக்கும் ரயில் திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் தற்போது கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு – ஆலந்தூர் மொத்த தூரம் 10 கி.மீ ஆகும். இந்த பயண தூரத்தை அடைய 15 முதல் 18 நிமிடங்கள் ஆகிறது. அதற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் என இந்தியாவின் மற்ற பகுதிகளை காட்டிலும் சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாகவுள்ளது. எனவே, மற்ற நகரங்களை விட குறைவான அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே தமிழக அரசும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பயணிகள் நலன் கருதி கட்டணத்தை குறைக்க வேண்டும்.

மேலும், மெட்ரோ ரயில் திட்டத்தை பறக்கும் ரயில் திட்டத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். அதோடு, பொதுமக்களும் அதிகளவில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவார்கள். அதன் மூலம் வருவாயை அதிகப்படுத்தலாம்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x