

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
தமிழ்த் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் (87) நேற்று முன்தினம் அதிகாலை காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடல் நேற்று காலை இசை அஞ்சலியுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி
எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், எஸ்பி.முத்துராமன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினரும், பல்வேறு திரைப்பட இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது, கமல்ஹாசன் கூறும்போது, ‘‘எம்.எஸ்.வி. ஒரு சாதனையாளர். அவர் இசையமைக்கும் விதம் அற்புதமானது. அதி நவீனமானது. எல்லாமும் மிகவும் எதார்த்தமாக விளையாட்டுப் போக்கில் செய்த விஷயங்கள். அவர் தனக்கு எதுவும் தெரிந்ததாக சொல்லிக் கொள்ளமாட்டார். அப்படி ஒரு எளிமை அவருக்கு உண்டு. எம்.எஸ்.விக்கு எல்லாமும் தெரியும். எப்படி தெரிந்தது என்று அவருக்கே தெரியாது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்’’ என்று தெரிவித்தார்.