பாஜக அரசின் ஊழல் குறித்து அதிமுக, திமுக எம்.பி.க்கள் அமைதி காப்பது ஏன்? - ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

பாஜக அரசின் ஊழல் குறித்து அதிமுக, திமுக எம்.பி.க்கள் அமைதி காப்பது ஏன்? - ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி
Updated on
1 min read

பாஜக அரசின் ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுவரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இடதுசாரி கட்சிகள் மக்கள் பிரச்சினைக்காக கூட்டு இயக்கம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக மதிமுக பொதுசெயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாஹிருல்லா மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரை சந்தித்துள்ளோம்.

மக்கள் பிரச்சினையில் கூட்டு இயக்கம் என்பதுதான் எங்களது முயற்சி. இதில், ஊழலை எதிர்ப்பதற்கு யார் எல்லாம் வருகின்றனரோ அவர்களை எல்லாம் கூட்டு இயக்கத்தில் ஏற்று கொள்வோம். மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச முதல்வர்கள் ஊழலில் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் ராஜினாமா செய்தபின் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி முடக்கி வருகின்றன.

ஆனால், பார்லிமெண்டில் இடம்பெற்றுள்ள அதிமுக, திமுக எம்பிக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். இவர்கள் ஊழலை எதிர்க்க எப்படி முன் வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது. கடந்த 20-ம் தேதி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட நான்கு கட்சிகள் பங்கேற்றன’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in